மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரித்திவி ஷா தற்சமயத்தில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார். 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியிலேயே சதமடித்த அவரை லாரா, சச்சின், சேவாக் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.
ஆனால் நாளடைவில் சுமாராக விளையாடிய பிரித்திவி ஷா அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள தவறினார். அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போதாக்குறைக்கு நல்ல ஃபிட்னஸ் கடைபிடிக்காமல் உள்ளூரிலும் சுமாராக விளையாடிய அவரை சமீபத்தில் தங்களது ரஞ்சிக் கோப்பை அணியிலிருந்து மும்பை நிர்வாகம் கழற்றி விட்டது.
பீட்டர்சன் அறிவுறை:
அதை அடுத்து 2024 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் நேற்று நடைபெற்ற கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் பிரித்திவி ஷா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் அவருடைய கேரியர் முடிந்து வருவதாக ரசிகர்கள் ஏமாற்றத்தை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் திறமை மிகுந்த பிரித்திவி ஷா இப்போதும் போராடி கம்பேக் கொடுக்க முடியும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் க்ரேக் சேப்பல் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த வரிசையில் அவருக்கு முன்னாள் இங்கிலாந்து நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் கம்பேக் கொடுப்பதற்கான ஆலோசனை தெரிவித்துள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதை நிறுத்த வேண்டும் என்று பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
போராடினால் முடியும்:
“சில சிறந்த விளையாட்டு கதைகள் கம்பேக் கதைகளாக இருந்துள்ளன. பிரித்திவி ஷா பற்றிய அக்கறையான நபர்கள் அவரை சுற்றியிருந்தால், அவரை உட்கார வைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்குமாறு சொல்ல வேண்டும். பின்னர் ஃபிட்டாக இருப்பதில் முழுமையான கவனத்தை அவருக்கு பயிற்றுவிக்க வேண்டும். அது அவரை கடந்த காலங்களைப் போல வெற்றிகரமான பாதையில் திரும்பி அழைத்துச் செல்வதற்கான வழியை கொடுக்கும்”
இதையும் படிங்க: தோல்வியை விட.. விராட் கோலி இதை செய்யப் போறதை நினச்சா தான் பயமா இருக்கு.. கிளார்க் கவலை
“ஏனெனில் பிரித்திவி ஷா தற்போதைய நிலைமையை தூக்கி எறியும் திறமைசாலி. அன்புடன் கெவின் பீட்டர்சன்” என்று கூறியுள்ளார். அதாவது ஃபிட்னஸை முன்னேற்றி கடினமாக பயிற்சிகளை எடுத்தால் கண்டிப்பாக பிரித்திவி ஷா மீண்டும் வெற்றிப்பாதையில் வர முடியும் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதற்கு அவரை ஒரு சிறந்த பயிற்சியாளர் வழிநடத்த வேண்டும் என்றும் பீட்டர்சன் கேட்டுக் கொள்வது குறிப்பிடத்தக்கது.



