இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அதனால் சமீபத்தில் நியூசிலாந்தில் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்துள்ள இந்திய அணி தங்களை குறைத்து மதிப்பிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.
மறுபுறம் நியூசிலாந்திடம் வீழ்ந்ததால் இம்முறை இந்தியாவை தோற்கடிப்போம் என்று ஆஸ்திரேலிய அணியினர் சவால் விட்டனர். ஆனால் முதல் போட்டியிலேயே ரோஹித் இல்லாத பும்ரா தலைமையிலான இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் விமர்சனங்களை அந்த அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கிளார்க் கவலை:
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியிடம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது கூட கவலையில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே விராட் கோலி சதத்தை அடித்தது தான் தமக்கு பயத்தை கொடுப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ஒரு விஷயம். ஆனால் முதல் போட்டியிலேயே விராட் கோலி சதத்தை அடித்தது எனக்கு நிறைய பயத்தைக் கொடுக்கிறது. என்னைப் பொறுத்த வரை அவர் தான் இந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக வருவார்” என்று கூறினார். அதாவது சமீபத்திய நியூசிலாந்து தொடர் உட்பட விராட் கோலி சமீப காலங்களில் பெரிய ரன்கள் குவிக்காமல் சுமாரான ஃபார்மில் விளையாடி வந்தார்.
ஆஸ்திரேலியாவின் கிங் கோலி:
அப்படிப்பட்ட அவர் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்ததால் பெரிய தன்னம்பிக்கையை பெற்றிருப்பார் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். அதைப் பயன்படுத்தி அடுத்து வரும் போட்டிகளிலும் விராட் கோலி பெரிய ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலையும் பின்னடைவையும் ஏற்படுத்துவார் என்று அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுவது போல ஆஸ்திரேலியாவில் விராட் கோலி மொத்தம் 10* சதங்கள் அடித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்காக விளையாட இடம் கிடைச்சாவே போதும்.. ஆனா அதை சொல்ல மாட்டேன்.. ராகுல் பேட்டி
அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் அதிக சர்வதேச சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் விராட் கோலி கடந்த போட்டியில் படைத்தார். அந்த வகையில் விராட் கோலி நல்ல ஃபார்முக்கு வந்துள்ளது இந்திய அணிக்கு எஞ்சிய தொடரில் பலத்தை சேர்க்கும் விஷயமாக அமைய உள்ளது. இதை அடுத்து இரண்டாவது போட்டி டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் பகல் இரவாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



