இந்த மாதிரி கேட்ச்ச நான் நான் பாத்ததே இல்ல. ஐ.பி.எல்-ன் சிறந்த கேட்ச் இதுதான் – பீட்டர்சன் புகழாரம்

Pietersen

நடப்பு ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த இரு அணிகளுமே இத்தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருந்தாலும் பின்பு ஆடிய மற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தவித்து வந்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்று இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கியது.

மற்றொரு அணியான பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் களமிறங்கியது. அந்த அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய ஃபேபியன் ஆலனிற்க்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறஸ் ஜோர்டன் இடம்பெற்றார். டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய விருப்பம் தெரிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த வெற்றியானது இத்தொடரில் கொல்கத்தா அணி பெறும் இரண்டாவது வெற்றியாகும். இந்த போட்டியில் அற்புதமான ஒரு கேட்சை பிடித்து அனைவரின் பாரட்டுகளையும் பெற்று வருகிறார் பஞ்சாப் அணி வீரரான ரவி பிஸ்னோய். 124 என்ற எளிய இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியை, பஞ்சாப் கிங்ஸ் அணியின் பௌலர்களள் தங்களது திறமையால் ரன் குவிக்க விடாமல் தடுத்தனர்.

முக்கியமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில்லையும், நிதிஷ் ரானாவையும் முதல் இரண்டு ஓவர்களிலேயே விக்கெட் எடுத்து கொல்கத்தா அணிக்கு அழுத்தம் தந்தனர் பஞ்சாப் கிங்ஸ் பௌலர்கள். கொல்கத்தா அணியின் வீரர் சுப்மன் கில் இரண்டாவது ஓவரின் 5வது பந்தில் அவுட் ஆகி வெளியேறியதும் களத்திற்குள் வந்தார் சுனில் நரேன். அவர் பௌன்சர் பந்துகளில் திணறுவதை கணித்து வைத்திருந்த பஞ்சாப் பௌலர்கள் அதே மாதரியான பந்துகளை அவருக்கு வீச தொடங்கினர்.

Bishnoi

- Advertisement -

இந்த யுக்திக்கு கைமேல் பலன் கிடைத்தது. மூன்றாவது ஓவரை வீசிய பஞ்சாப் அணியின் பவுலர் அர்ஸ்தீப் சிங், ஒரு பௌன்சர் பந்தை வீச அதை மிட் விக்கெட் திசைக்கு தூக்கி அடித்தார் சுனில் நரைன். காற்றில் மிக உயரத்திற்கு சென்ற அந்த பந்தை மிக வேகமாக ஓடி டைவ் அடித்து மிக அற்புமாக கேட்ச் பிடித்தார் பஞ்சாப் வீரர் ரவி பிஸ்னோய். இந்தக் கேட்சைப் பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கேட்சைப்பற்றி கூறியிருக்கிறார். அந்த ட்வீட்டில் அவர், என்ன ஒரு அற்புதமான கேட்ச். ஐபிஎல் தொடர்களிலேயே இதுதான் சிறந்த கேட்ச் என்று பாரட்டியிருந்தார்.

இந்த ட்வீட்டிற்கு கலவையான விமர்ச்சனங்களை வழங்கி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். கெவின் பீட்டர்சனின் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த ரசிகர்கள், இது இந்த தொடரில் வேண்டுமானால் சிறந்த கேட்சாக இருக்கலாம். ஆனால் மொத்த ஐபிஎல் தொடரில் இது சிறந்த கேட்ச் இல்லையென்று கூறி வருகிறார்கள்.