வீடியோ : இப்படி கூடவா காயமாகும்? வினோத காயத்தால் அறுவை சிகிக்சைக்கு உள்ளான தெ.ஆ வீரர் பரிதாபம் – ரசிகர்கள் வியப்பு

Keshav Maharaj
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மார்ச் 8ஆம் தேதியன்று புகழ்பெற்ற வாண்ட்ரஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 320 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு டீன் ஏல்கர் 42, ஐடன் மார்க்கம் 96, டீ ஜூர்ஸி 85 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான நல்ல ரன்களை எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, கெயில் மேயர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தென்னாபிரிக்காவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 251 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் ப்ரத்வெய்ட் 17, சந்தர்பால் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 81 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்ஸி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 69 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் 18, டீன் எல்கர் 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

வினோத காயம்:
ஆனால் 4வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் தெம்பா பவுமா பொறுப்புடன் விளையாடி 20 பவுண்டரியுடன் 7 வருடங்கள் கழித்து சதமடித்து 172 (280) ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் தென்னாபிரிக்கா 321 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இறுதியில் 391 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சுமாராக செயல்பட்டு வெறும் 106 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜோஸ்வா டா சில்வா 34 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக சைமன் ஹார்மர் மற்றும் ஜெரால்டு கோட்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 284 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா 2 – 0 (2) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து கோப்பையை வென்றது. ஆனால் இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் கெய்ல் மேயர்ஸை எல்பிடபுள்யூ முறையில் ஸ்பின்னர் கேசவ் மகாராஜா அவுட் கேட்ட போது நடுவர் அவுட் கொடுக்க மறுத்து விட்டதால் தென்னாப்பிரிக்கா டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்தது.

- Advertisement -

அதை சோதித்த 3வது நடுவர் அவுட் என அறிவித்தார். அதை தனது அணி வீரர்களுடன் களத்தில் நின்று பெரிய திரையில் பார்த்துக் கொண்டிருந்த கேசவ் மகாராஜ் அவுட் என்று அறிவிக்கப்பட்டதும் அந்த மகிழ்ச்சியில் வழக்கம் போல விக்கெட்டை கொண்டாடுவதற்காக வெறித்தனமாக ஓட துவங்கினார். ஆனால் அந்த விக்கெட்டை கொண்டாட வேண்டும் என்ற வெறியில் தன்னுடைய வலது பாதத்தை மிகவும் வேகமாக அழுத்தமாக தரையில் ஊன்றி ஓட துவங்கியதால் துரதிஷ்டவசமாக காயத்தை சந்தித்த அவர் வலியால் 2 அடிகளுக்கு மேல் ஓடாமல் கீழே விழுந்தார்.

அப்போது கொண்டாட துவங்கிய இதர தென்னாபிரிக்க வீரர்களும் அவருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்த நிலையில் காயத்தால் அதிகப்படியான வலியை உணர்ந்த கேசவ் மகாராஜ் எழுந்து நடக்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக அவரை சோதித்த மருத்துவ குழுவினர் வேறு வழியின்றி படுக்கையில் ஏற்றி 4 சக்கர வாகனத்தில் மைதானத்திலிருந்து அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து சோதிக்கப்பட்ட அவரது காயம் பெரிய அளவில் இருந்ததால் உடனடியாக அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் நல்லபடியாக இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs AUS : அனுஷ்கா நெகிழ்ச்சி – உடல் சரியில்லாத போதும் 2016க்குப்பின் மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடிய கிங் கோலி

இருப்பினும் அவர் முழுமையாக குணமடைவதற்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 2023 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று தெரிய வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படியுமா அதுவும் இவ்வளவு பெரிய காயமடைவாங்க என்ற வியப்பை வெளிப்படுத்தி விரைவில் குணமடைந்து வருமாறு கேசவ் மகாராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement