IND vs SA : தல – தளபதியை போல் ரோஹித் – விராட்டுக்காக கேரள ரசிகர்கள் செய்த வைரல் சம்பவம் – முழு விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

உலக கோப்பையை வெல்லும் பயணத்தில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைந்து பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதற்காக துவளாமல் அடுத்ததாக உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி மீண்டும் வெற்றிப் பாதையில் நடக்கும் இந்தியா அடுத்ததாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது.

உலகக் கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் கடைசி டி20 தொடராக சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடர் செப்டம்பர் 25ஆம் தேதியன்று கேரளாவில் துவங்குகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவுக்கு சவால் கொடுத்த தென்னாபிரிக்கா மழையின் குறுக்கீட்டால் 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதைவிட சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா வரலாற்றில் ஒரு முறை கூட தென் ஆப்பிரிக்காவை டி20 தொடரில் தோற்கடித்து கோப்பையை வென்றதில்லை.

- Advertisement -

கலைக்கட்டும் கேரளம்:
அந்த வகையில் சவாலான தென் ஆப்பிரிக்காவை இம்முறை சொந்த மண்ணில் தோற்கடித்து முதல் முறையாக தொடரை கைப்பற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா போராட உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 28ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக இரு அணியை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக இந்திய அணி பங்குபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெற்றாலும் அங்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கொடுக்கத் தவறுவதில்லை. அதிலும் தற்போது கேரளாவில் 2019க்குப்பின் 3 வருடம் கழித்து முதல் முறையாக இந்தியா ஒரு சர்வதேச போட்டியில் களமிறங்குகிறது. அதனால் இந்திய அணியினர் கேரளாவுக்குள் நுழைந்த போதே விமான நிலையத்திலிருந்து மைதானம் வரை ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

தல தளபதி:
இந்நிலையில் இப்போட்டி நடைபெறும் கிரீன்ஃபீல்ட் மைதானத்திற்கு முன்பாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கு மிகப் பெரிய கட் அவுட் பேனர் வைத்து கேரள ரசிகர்கள் மிகப் பெரிய வரவேற்பும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்தில் சதமடித்து தூளாக்கி ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் தங்கள் ஊரிலும் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்தனர்.

அதைப் பார்த்த ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அதற்கு போட்டியாக தங்களது ஹீரோவின் பெரிய பேனரை வைத்து வரவேற்பையும் அன்பையும் வெளிப்படுத்தி இப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். இதை பார்க்கும் போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தல அஜித் – தளபதி விஜய் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் ஒரே தியேட்டரில் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் போட்டி போட்டு பேனர் வைத்து கொண்டாடுவதை போன்ற உணர்வு நமக்கு வருகிறது.

முன்னதாக கடந்த 2017இல் முதல் முறையாக இங்கு சர்வதேச டி20 போட்டி நடைபெற்ற போது முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு தான் கேரள ரசிகர்கள் முதல் முறையாக பிரமாண்ட கட் அவுட் வைத்திருந்தனர். தற்போது அவர் ஓய்வு பெற்று 2 வருடங்கள் ஆனாலும் அவர் மீது வைத்துள்ள பாசத்தை மறக்காத கேரள ரசிகர்கள் 2007இல் டி20 உலகக் கோப்பையை வென்ற அவரது புகைப்படத்தை பெரியா பேனராக வைத்து தங்களது அன்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படி வெளியூர் ஹீரோக்களுக்கு பேனர் வைத்த ரசிகர்கள் உள்ளூர் ஹீரோவை மட்டும் விடுவார்களா? ஆம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனது திறமையால் இந்தியாவுக்காக விளையாட போராடி வரும் சஞ்சு சாம்சனுக்கு இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கும் சேர்த்து பேனர் வைத்துள்ளனர். மொத்தத்தில் பாகுபாடின்றி அன்பை வெளிப்படுத்தும் கேரள ரசிகர்கள் இதர மாநில ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்கள் என்றே கூறலாம்.

Advertisement