ரஞ்சி கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது செமி ஃபைனல் போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் மோதின. குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரளா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக முகமது அசாருதீன் சதத்தை அடித்து 177*, கேப்டன் சச்சின் பேபி 69, சல்மான் நிசர் 52 ரன்கள் எடுத்தார்கள். குஜராத் அணிக்கு அதிகபட்சமாக நாக்வாஸ்வாலா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு 131 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஆர்யா தேசாய் 73 ரன்கள் எடுத்தார்.
கேரளாவுக்கு அதிர்ஷ்டம்:
மறுபுறம் நிதானமாக விளையாடிய ப்ரியங் பஞ்சல் சதத்தை அடித்து 148 ரன்கள் எடுத்து அசத்தினார். மிடில் ஆர்டரில் உர்வில் படேல் 25, ஹேமங் படேல் 27, கேப்டன் கஜா 2, விஷால் ஜெய்ஸ்வால் ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் ஜெய்மீட் படேல் 79, சித்தார்த் தேசாய் 30 ரன்கள் எடுத்ததால் குஜராத் 446-9 என்ற நிலைக்கு வந்தது.
அதனால் கேரளாவை விட முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை பிடிக்க கடைசி விக்கெட்டுக்கு குஜராத்துக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 10வது இடத்தில் களமிறங்கிய நாகஸ்வாலா 10 (48) ரன்கள் எடுத்திருந்ததால் குஜராத் முன்னிலை பெற வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது கேரளாவின் சர்வாட் வீசிய 175வது ஓவரின் 4வது பந்தை நாகஸ்வாலா ஷார்ட் லெக் திசைக்கு மேலே தூக்கி அடிக்க முயற்சித்தார்.
74 வருட வரலாறு:
ஆனால் அந்த பந்து அங்கு நின்று கொண்டிருந்த சல்மான் நிசர் தலையில் இருந்த ஹெல்மெட் மீதுள்ள லோகோ பகுதியில் பட்டு அப்படியே திரும்பியது. அதை பேட்ஸ்மேனுக்கு பின்னால் முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த கேரளாவின் கேப்டன் சச்சின் பேபி லாவகமாக பிடித்தார். அதனால் குஜராத்தை 455க்கு ஆல் அவுட் செய்த கேரளா 2 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜலஜ் சக்சேனா 4, ஆதித்யா சர்வாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: தோல்வியை சந்தித்தது மாட்டுமில்லாமல் தண்டனையையும் பெற்ற பாகிஸ்தான் அணி – விவரம் இதோ
அடுத்ததாக விளையாடிய கேரளா 114-4 ரன்கள் எடுத்திருந்த போது 5வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலை பெற்றதால் கேரளா ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதனால் ரஞ்சிக்கோப்பையில் விளையாடிய 74 வருடங்களில் முதல் முறையாக கேரளா ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. அதற்கு அந்த வினோதமான கேட்ச் முக்கிய காரணமாக அமைந்தது ரசிகர்களை வியக்க வைக்கிறது.



