தோனி இப்படி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலக இதுதான் காரணம் – காசி விஸ்வநாதன் விளக்கம்

Kasi
- Advertisement -

மும்பையில் வருகிற மார்ச் 26ஆம் தேதி பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இன்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருபுறம் தோனியின் இந்த விலகல் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும் மறுபுறம் ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி இப்படி திடீரென விலக என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணியின் சிஇஓ காசிவிசுவநாதன் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : சென்னை அணி சார்பாக இன்று நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் தோனி இந்த முடிவினை எடுத்தார். அவருடைய இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

மேலும் எப்போதுமே கேப்டன் பொறுப்பை பற்றி யோசித்துக் கொண்டிருந்த தோனி ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி ஜடேஜாவும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளதால் அவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டிய சரியான தருணம் என்று நினைத்து தோனி ஒப்படைத்துள்ளார் என்று கூறினார்.

MS Dhoni Jadeja

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எப்போதுமே தோனி சிஎஸ்கே அணியின் நலனுக்கு எது முக்கியமோ அதைப்பற்றி மட்டுமே யோசிப்பவர். அந்த வகையில் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதில் எங்களுக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. அவரின் இந்த கேப்டன் பதவி விலகல் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

- Advertisement -

அதோடு ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஆலோசிப்பது புதிது கிடையாது. கடந்த ஆண்டே இது குறித்து எல்லாம் பேசி இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் விராத் கோலி கேப்டன்சி செய்ய தயாரானபோது எவ்வாறு அவரிடம் தோனி பொறுப்பை ஒப்படைத்தாரோ அதேபோன்று தற்போது சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா தயாராகி இருப்பதை உணர்ந்த தோனி அவரது கேப்டன் பொறுப்பை அவருக்கு தந்திருக்கிறார்.

இதையும் படிங்க : எம்எஸ் தோனியின் கீழ் விளையாட வேண்டும், உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரின் நீண்டநாள் ஆசை – விவரம் இதோ

எப்படி இருந்தாலும் தோனி களத்தில் ஜடேஜாவுக்கு வழிகாட்டுவார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 40 வயதாகும் தோனி தனது வயது மற்றும் அணியின் எதிர்காலம் குறித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement