ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 2008 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் இதயமாக கருதப்படும் அவர் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.
அப்போதிலிருந்தே ஐபிஎல் தொடரில் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி காணப்பட்டு வருகிறது. அதற்கு எப்போதுமே நேரடியாக பதில் சொல்லாத தோனி தம்முடைய வழியில் வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடுகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் காயமடைந்த ருதுராஜ்க்கு பதிலாக மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் சிஎஸ்கே மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
2026இல் தோனி விளையாடுவார்:
அப்போது அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளைத் துவங்கியதாக தோனி தெரிவித்தார். மேலும் 6 மாதம் கழித்து தம்முடைய உடல் நிலையைப் பொறுத்து 2026 ஐபிஎல் சீசனில் விளையாடுவது பற்றி முடிவெடுக்க உள்ளதாகவும் தோனி தெரிவித்திருந்தார். இருப்பினும் தற்போது 44 வயதை கடந்து விட்ட அவரால் முழுமையாக பேட்டிங் செய்ய முடிவதில்லை.
அதனால் எப்போதும் வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற நிலைமையிலேயே தோனி இருந்து வருகிறார். இந்நிலையில் 2026 ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதே சமயம் 2026 சீசனில் சிஎஸ்கே உறுதியாக கோப்பையை வெல்லுமா என்பது தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
விஸ்வநாதன் அறிவிப்பு:
இது பற்றி ஒரு பள்ளி நிகழ்ச்சியில் குழந்தைகள் கேட்ட கேள்விக்கு விஸ்வநாதன் கொடுத்த பதில்கள் பின்வருமாறு.
குழந்தை 1: அடுத்த வருடம் நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்காக திட்டமிடுகிறீர்களா?
விஸ்வநாதன்: ஆம் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நாங்கள் கோப்பையை வெல்வோமா என்பது தெரியாது. இருப்பினும் நாங்கள் எங்களது சிறந்த முயற்சியைக் கொடுப்போம்.
இதையும் படிங்க: பயமற்ற அபிஷேக் சர்மா இந்த திறமையால் தான்.. ஆஸியில் வந்த உடனேயே அசத்துறாரு.. வாட்சன் பாராட்டு
குழந்தை 1: தோனி ஓய்வு பெறப் போகிறாரா?
விஸ்வநாதன்: இல்லை. அவர் ஓய்வு பெறவில்லை.
குழந்தை 1: எப்போது தோனி ஓய்வு பெறுவார்?
விஸ்வநாதன்: அவரிடம் கேட்டுவிட்டு உங்களிடம் சொல்கிறேன்
குழந்தை 1: இம்முறை உங்களுடைய அணியில் எந்த புதிய வீரரை விளையாட வைக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
விஸ்வநாதன்: அது டிசம்பர் முதல் வாரத்தின் இறுதியில் ஏலம் முடிந்த பின்பே எங்களுக்கு தெரியும். அப்போது என்னிடம் நீங்கள் கேளுங்கள் சொல்கிறேன்
குழந்தை 2: சிஎஸ்கே அணியின் டைரக்டராக இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?
விஸ்வநாதன்: ஒரு சிறந்த ஐபிஎல் அணியை நிர்வகிப்பதை பெருமையாக கருதுகிறேன்.



