இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதன் காரணமாக இந்திய அணி நிச்சயம் தோற்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி மேற்கொண்டு 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்ந்தது. அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்றில் தங்களுடைய மிகச்சிறிய மிராக்கள் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றி கோப்பையை வென்றதற்கு நிகரான மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களுக்கு கொடுத்தது.
ஓவரா கொண்டாடல:
இந்நிலையில் அந்த மிராக்கிள் வெற்றியை வைத்துக்கொண்டு இங்கிலாந்து அணியிடம் இந்திய அணியினர் அதிகமாகக் கொண்டாடவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார். மாறாக போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியின் உடைமாற்றும் அறைக்கு இந்திய அணியினர் அனைவரும் சென்றதாக அவர் கூறியுள்ளார். அப்போது இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் இந்திய அணியை பாராட்டியதாகவும் நாயர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி இஎஸ்பிஎன் இணையத்தில் நாயர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் அதிகமாக கொண்டாடி எதையும் செய்யவில்லை. நாங்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் உடை மாற்றும் அறைக்குச் சென்றோம். அங்கே நன்றாக பேசினோம். இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் மதித்தனர். உண்மையில் அது மிகச்சிறந்த தொடராக அமைந்தது”
பாராட்டிய மெக்கல்லம்:
“அந்தத் தொடர் சமீப காலங்களில் விளையாடப்பட்டத் தொடர்களில் மிகச் சிறந்தது என்று ப்ரெண்டன் மெக்கல்லம் குறிப்பிட்டார். வீரர்களாக எங்களுக்கு மைதானத்தில் அந்த வெற்றியின் அளவை உணர முடியவில்லை. ஆனால் தற்போது அப்போட்டியை திரும்பிப் பார்க்கையில், தருணங்கள் எப்படி மாறியது என்பதை வைத்து ஒரு அணியாக நாங்கள் ஸ்பெஷலானவற்றை சாதித்துள்ளோம் என்பதை உணர்கிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: எதிர்வரும் அந்த தொடரில் அசத்தினால் முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம் – வெளியான தகவல்
முன்னதாக “தாம் அங்கமாக இருந்த 5 போட்டிகள் கொண்ட தொடர்களிலேயே இது தான் மிகச்சிறந்த பட்டாசான டெஸ்ட் தொடர்” என்று ப்ரெண்டன் மெக்கல்லம் பிபிசி பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் 2005 ஆஷஸ் போல 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் அற்புதமானதாக அமைந்ததாக பலரும் பாராட்டினார்கள். விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் இல்லாமலேயே அத்தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி சமன் செய்தது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.



