இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி மே 30ஆம் தேதி கேன்டர்பரி நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 8, ஜெய்ஸ்வால் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் நங்கூரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
கருண் நாயர் அபாரம்:
ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நல்ல வேகத்தில் ரன்களை குவித்து அரை சதத்தை அடித்தது. 3வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சர்பராஸ் கான் சதத்தை நழுவ விட்டு 92 ரன்னில் அவுட்டானார். இருப்பினும் இங்கிலாந்தில் செட்டாக மாட்டார் என்ற கருத்துடன் அடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடரில் தம்மை கழற்றி விட்ட தேர்வுக்குழுவுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்தார்.
மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய கருண் நாயர் சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடி அரை சதத்தை அடித்தார். 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் துருவ் ஜுரேலும் சதத்தை நழுவ விட்டு 94 ரன்னில் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார்.
8 வருட கனவு:
ஆனால் இந்தப் பக்கம் அந்த தவறை செய்யாத கருண் தொடர்ந்து அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை அடித்து 204 (281) ரன்னில் அவுட்டானார். 2016ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதத்தை அடித்த அவர் சேவாக்கிற்கு நிகராக சாதனை படைத்தார். ஆனால் அதன் பின் பெரிய ரன்களை குவிக்கத் தவறியதால் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூரில் கடுமையாக போராடி தற்போது கம்பேக் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கிரிஸ் கெயிலுக்கு அடுத்து 2 ஆவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா
அந்த வாய்ப்பில் தற்போது இரட்டை சதத்தை அடித்துள்ளதால் அவருக்கு அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரின் முதல் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் 99% வாய்ப்பு உறுதியாகியுள்ளது. அந்த வகையில் கருண் நாயர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற தம்முடைய 8 வருட கனவை கிட்டத்தட்ட நிஜமாக்கியுள்ளார். அவருடைய சிறந்த ஆட்டத்தால் இப்பதிவிடும் போது இந்தியா ஏ அணி 512/7 ரன்களை குவித்து அசத்தி வருகிறது.



