ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது பகுதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வருகிறது. அதில் எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் கர்நாடகா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி ஜனவரி 23ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி இந்திய வெள்ளைப்பந்து அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் தலைமையில் களமிறங்கியது. சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சுமாராக விளையாடிய கில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் ஃபார்முக்கு திரும்பும் முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்கிய கில் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
55க்கு ஆல் அவுட்:
அவரைப் போலவே மற்ற பஞ்சாப் வீரர்களும் கர்நாடகாவின் அனல் பறந்த பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 29 ஓவரில் வெறும் 55 ரன்களுக்கு பஞ்சாப்பை சுருட்டிய கர்நாடகா ஆரம்பத்திலேயே மிரட்டியது. பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ரமந்திப் சிங் 16 ரன்கள் எடுத்த நிலையில் கர்நாடகாவுக்கு அதிகபட்சமாக கௌஷிக் 4, அபிலாஷ் செட்டி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக களம் இறங்கிய கர்நாடகா தங்களுடைய சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை சிறப்பாக எதிர்கொண்டது. குறிப்பாக அந்த அணிக்கு ஒருபுறம் அனீஸ் 33, கேப்டன் மயங் அகர்வால் 20, படிக்கல் 27, கிருஷ்ணன் ஸ்ரீஜித் 26, அபினவ் மனோகர் 34, ஸ்ரேயாஸ் கோபால் 31, யசோவரதன் 26, பிரசித் கிருஷ்ணா 30 என அனைத்து பேட்ஸ்மேன்களும் நல்ல ரன்களை எடுத்தனர்.
துணை கேப்டன் சரியானவரா:
அவர்களுடன் ஜோடி சேர்ந்து எதிர்புறம் நான்காவது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடிய ஸ்மரன் ரவிச்சந்திரன் சதத்தை அடித்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல மேலும் அற்புதமாக விளையாடிய அவர் இரட்டை சதத்தை விளாசி 203 ரன்கள் குவித்து அவுட்டானார். அவரது நேர்த்தியான ஆட்டத்தால் கர்நாடகா 475 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக மார்க்கண்டே 3, ஜாசிண்டர் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இதையும் படிங்க: 91/6 டூ 274/7.. ரோஹித், ரஹானே தவறை சரிசெய்த லார்ட் தாகூர்.. மும்பையை தூக்கி அகர்கருக்கு பதிலடி
அடுத்ததாக விளையாடும் பஞ்சாப் இரண்டாவது நாள் முடிவில் 24-2 என திணறி வருகிறது. பிரப்சிம்ரன் 1, அன்மோல்ப்ரீத் சிங் 14 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 396 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் கேப்டன் கில் 7* (36) ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார். மொத்தத்தில் இப்போட்டியில் கில் ஆட்டத்தையும் தலைமை பொறுப்பையும் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இவரை துணை கேப்டனாக போட்டு பிசிசிஐ சிக்கியுள்ளதா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.