
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 26000+ ரன்கள் மற்றும் 80 சதங்கள் அடித்துள்ள அவர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதே போல 2014இல் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் 2016 – 2021 வரை இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக சொல்லித்தது.
அதனால் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவருடைய தலைமையில் தான் இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதே போல ஃபிட்னஸ்க்கு உதாரணமாக திகழும் விராட் கோலி பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். இந்நிலையில் விராட் கோலி எப்போதுமே பேட்டிங்கில் ஃபார்ம் அவுட்டானதாக தெரியாது என்று இந்திய வீரர் கரண் சர்மா தெரிவித்துள்ளார்.
ஏனெனில் எப்போதுமே விராட் கோலி ஒரே மாதிரியான பயிற்சிகளை எடுத்து தனது ஃபிட்னஸ் லெவலை உச்சமாக வைத்திருப்பார் என்று அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் 2014 அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 363 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை டிராவுக்காக விளையாடக்கூடாது என்று கேப்டன் விராட் கோலி சொன்னது இந்திய வீரர்களிடம் ஆச்சரியத்தையும் நேர்மறையையும் ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் கரண் சர்மா பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது எப்போதும் ஸ்பெஷல். சிலருக்கு மட்டுமே அது போன்ற துவக்கம் கிடைக்கும். அப்போது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தார். நாங்கள் 300க்கும் மேற்பட்ட ரன்களை சேசிங் செய்ய வேண்டியிருந்தது”
“அப்போது ட்ராவுக்கு இடமில்லை நாம் சேசிங் செய்யப் போகிறோம் என்று விராட் சொன்னார். அது உடைமாற்றும் அறையில் இருந்த இந்திய வீரர்களிடம் ஏகப்பட்ட நேர்மறையை ஏற்றியது. அது முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறை. ஆஸ்திரேலிய மண்ணில் 4வது இன்னிங்ஸில் 300க்கும் மேற்பட்ட ரன்களை சேசிங் செய்யப் போகிறோம் என்று அவர் சொன்னது நமது கேப்டனிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என்ற அற்புதமான அறிகுறியை இந்திய வீரர்களிடம் ஏற்படுத்தியது”
இதையும் படிங்க: அன்னபோஸ்டாக ஐசிசி தலைவரான ஜெய் ஷா.. புதிய உலக சாதனை.. எப்போது வரை இருப்பார்?
“அந்தத் தொடருக்கு முன்பாக (2014 இங்கிலாந்து தொடரில்) விராட் கோலி ரன்கள் அடிக்கவில்லை. உண்மையில் அப்போதும் விராட் கோலி அவுட் ஆஃப் ஃபார்ம் போல தெரியவில்லை. ஏனெனில் முழுமையாக தயாராவது, ஃபிட்னஸ், மனதளவிலான அணுகுமுறை ஆகியவற்றை சரியாக செய்து கொண்டிருந்த அவர் தமக்கு மோசமான தொடர் அமைந்தது என்ற இம்ப்ரசனை வெளிப்படுத்தவில்லை” என்று கூறினார்.