
ரஞ்சிக் கோப்பை 2024 – 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் ஜனவரி 23ஆம் தேதி எலைட் குரூப் சி கர்நாடகா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து அப்போட்டியில் சுப்மன் கில் தலைமையில் பஞ்சாப் களமிறங்கியது. சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விகளுக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர் இந்தப் போட்டியில் கேப்டனாக களமிறங்கினார்.
ஆனால் அந்த வாய்ப்பில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அவரை போலவே மற்ற வீரர்களும் சுமாராக விளையாடியதால் பஞ்சாப்பை 55 ரன்களுக்கு சுருட்டி வீசிய கர்நாடகா ஆரம்பத்திலேயே மிரட்டியது. அதிகபட்சமாக ரமந்திப் சிங் 16 ரன்கள் எடுத்த நிலையில் கர்நாடகாவுக்கு அதிகபட்சமாக கௌஷிக் 4 அபிலாஷ் செட்டி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்ததாக களம் இறங்கிய கர்நாடகா அணி சுமாராக பவுலிங் செய்த பஞ்சாப்பை அட்டகாசமாக எதிர்கொண்டு 475 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு ஒருபுறம் கேப்டன் மயங் அகர்வால் 20, படிக்கல் 27, ஸ்ரீஜித் 26, அபினவ் மனோகர் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 31, பிரசாத் கிருஷ்ணா 30 ரன்கள் குவித்து அசத்தினார்கள். எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய ஸ்மரன் ரவிச்சந்திரன் இரட்டை சதத்தை அடித்து 203 ரன்கள் குவித்தார்.
பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக மார்க்கண்டே மற்றும் ஜெசிந்தர் சிங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். பின்னர் விளையாடிய பஞ்சாப்புக்கு கேப்டன் கில் ஒருபுறம் நிதானமாக விளையாடி போராடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் யாருமே 30 ரன்கள் கூட தாண்டவில்லை. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து போராடிய கில் சதத்தை அடித்து தம்முடைய தரத்தை நிரூபித்து 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா கேப்டன்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஐசிசி வெளியிட்ட 2024 டி20 கனவு அணி இதோ
இறுதியில் பஞ்சாப்பை 213 ரன்களுக்கு சுருட்டிய கர்நாடகா இன்னிங்ஸ் மற்றும் 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக யசோவர்தன் 3, ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். மொத்தத்தில் இந்தப் போட்டியில் சுப்மன் கில் பேட்ஸ்மேனாக ஓரளவு அசத்தினாலும் கேப்டனாக சுமாராகவே செயல்பட்டார். ஏனெனில் இதே பஞ்சாப் அணி தங்களுடைய கடைசி போட்டியில் மார்க்கண்டே தலைமையில் பீகாரருக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அப்படிப்பட்ட கில்லை இந்திய அணி துணை கேப்டனாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கவலையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது.