
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஜாம்பவான் கபில் தேவை முந்தி சில சாதனைகளைப் படைத்தார்.
அது போக 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கியப் பங்காற்றியதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட அவர் விலகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் ஏற்கனவே இருக்கும் தரமான வீரர்களை வைத்து கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் என்பது டென்னிஸ், ஃகோல்ப் போன்ற தனிநபர் விளையாட்டு கிடையாது என ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். எனவே பும்ரா விலகியதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? என்று அவர் வினவியுள்ளார். மேலும் வருடத்தில் 10 மாதங்கள் விளையாடுவதாலேயே பும்ரா காயத்தைச் சந்திக்கக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஒற்றுமையாக இணைந்து விளையாடினால் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்கள் வருடத்தில் 10 மாதங்கள் விளையாடுவதே எனக்கு உள்ள ஒரே கவலையாகும். அதன் காரணமாக காயங்கள் வருவது பொதுவான ஒன்றாகும். அணியில் இல்லாத ஒருவரைப் பற்றி ஏன் பேச வேண்டும்”
“இது அணி விளையாட்டு. அணியாகத் தான் சேர்ந்து வெல்ல முடியும். தனிநபர்களால் வெல்ல முடியாது. இது ஒன்றும் பேட்மிட்டன், டென்னிஸ் அல்லது ஃகோல்ப் கிடையாது. சாம்பியன்ஸ் டிராபியில் நாம் அணி விளையாட்டை விளையாடப் போகிறோம். எனவே அணியாக சேர்ந்து விளையாடினால் கண்டிப்பாக நம்மால் வெல்ல முடியும்”
இதையும் படிங்க: இந்திய அணியின் வீரர்களுக்கு மட்டுமின்றி பயிற்சியாளருக்கும் செக் வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
“இப்போதுள்ள இளம் வீரர்களை பார்க்கும் போது அவர்களுடைய தன்னம்பிக்கை நம்ப முடியாத அளவுக்கு நன்றாக இருக்கிறது. உண்மையில் நாங்கள் இளமையாக இருந்த போது கூட இவ்வளவு தன்னம்பிக்கையைக் கொண்டிருந்ததில்லை. எனவே இந்திய இளம் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ஆம் தேதி துபாய் நகரில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.