வெறும் 30 பால் போட்டா எப்டி? பும்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைவதற்கான காரணத்தை உடைக்கும் கபில் தேவ்

- Advertisement -

2023 காலண்டர் வருடத்தில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது. ஆனால் அந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சு துறையின் முகமாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்து வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Bumrah

முன்னதாக கடந்த ஜூலையில் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் பங்கேற்காதது தோல்வியை கொடுத்தது. அந்த நிலையில் குணமடைந்து ஓரிரு போட்டிகளில் விளையாடிய அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது இந்தியாவுக்கு மீண்டும் தோல்வியை கொடுத்தது. தற்போது 3 மாதங்கள் கடந்து விட்ட அவர் காயத்திலிருந்து குணமடைந்ததால் நடைபெற்று முடிந்த இலங்கை ஒருநாள் தொடரில் சேர்க்கப்படுவதாக அறிவித்த பிசிசிஐ அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக அணியிலிருந்து விடுவிப்பதாக அடுத்த நாளே அறிவித்து பல்டி அடித்தது.

- Advertisement -

காரணம் என்ன:
ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் எப்படியோ முழுவதும் விளையாடுவது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பும்ரா மட்டுமல்லாமல் தீபக் சஹார் போன்ற மேலும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் சமீப காலங்களில் காயமடைந்து வெளியேறியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற எக்ஸ்ட்ரா தொடர்கள் வந்துள்ளதே வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைவதற்கு ஒரு காரணம் என்று 16 வருடங்கள் வேகப்பந்து வீச்சாளராக ஓடி இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Deepak Chahar 1

ஆனால் அதை விட இப்போதெல்லாம் காயமடைந்து விடுவோமோ என்ற பயத்துடன் வலை பயிற்சியில் 30 பந்துகளுக்கு வீசாமல் முழுமையான பயிற்சிகளை எடுக்காமல் செயல்படுவதே இந்த காயங்களுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது இந்திய கிரிக்கெட்டின் ஒரு சீசன் 10 மாதங்களாக அதிகரித்துள்ளது. அதனால் நீங்கள் எந்தளவுக்கு அதிகமாக விளையாடுகிறீர்களோ அந்தளவுக்கு காயங்கள் வருவதும் அதிகமாக ஏற்படும். ஏனெனில் கிரிக்கெட் என்பது மிகவும் எளிதான விளையாட்டல்ல”

- Advertisement -

“அதில் விளையாடும் வீரர்கள் தடகளத்தில் விளையாடுபவர்கள் போல் இருக்க வேண்டும் என்பதுடன் அனைத்து தசைகளையும் பயன்படுத்தி விளையாட வேண்டும். மேலும் மிருதுவானது முதல் கடினமானது வரை பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் விளையாட வேண்டும். ஆனால் அந்த பல்வேறு சூழ்நிலைகளுக்கு உங்களை நீங்கள் எளிதாக உட்படுத்திக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அது உங்களது உடலில் பெரிய பாரத்தை ஏற்படுத்தும். இறுதியில் அது உங்களை உடைக்கும்”

kapil

“ஆனால் அதை தடுப்பதற்கு நீங்கள் வலை பயிற்சியில் அதிகமாக பந்து வீச வேண்டும். அங்கே நீங்கள் எந்தளவுக்கு பந்து வீசுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களது தசைகள் வளரும். ஆனால் இப்போதெல்லாம் அணி நிர்வாகங்களே காயமடைந்து விடுவார்கள் என்ற பயத்தில் தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை 30 பந்துகளுக்கு மேல் வீசுவதற்கு அனுமதிப்பதில்லை. அது தான் காயங்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும். அதே சமயம் நேரடியாக அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதால் அதிகப்படியான பாரத்திற்கும் அழுத்தத்திற்கும் உள்ளாகி இறுதியில் உடைந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமாக பந்து வீச வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு பார்மேட்டிற்கும் தனித்தனி கேப்டன்களா? மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலளித்த – ராகுல் டிராவிட்

அதாவது பயிற்சி தான் ஒரு வீரரை முழுமையாக்கும் என்ற சொல்லுக்கேற்ப எந்தளவுக்கு வலை பயிற்சி செய்கிறோமோ அந்தளவுக்கு தசைகள் வளர்ந்து காயங்களிலிருந்து தப்ப முடியும் என்று கபில் தேவ் கூறியுள்ளார். ஆனால் பும்ரா, தீபக் சஹர் ஆகிய இருவருமே களத்தில் அல்லாமல் வலைப்பயிற்சியில் பந்து வீசும் போது தான் காயமடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement