இந்திய ரசிகர்கள் விமர்சிக்காம சப்போர்ட் பண்ணுங்க.. இங்கிலாந்தில் கில் இதை செஞ்சா ஜெய்க்கலாம்.. கபில் தேவ்

Kapil Dev
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இளம் இந்திய அணிக்கு கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரியளவில் ரன்கள் குவித்திராத அவர் வெறும் 25 என்ற பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ளார். அதனால் முதலில் சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சேவாக் ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் சுப்மன் கில் பற்றி எதிர்மறையான விஷயங்களை பேசுவதை விட நேர்மறையான விஷயங்களை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கபில் தேவ் கருத்து:

குறிப்பாக 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நோக்கி அடியெடுத்து வைக்கும் இளம் இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் எதிர்பார்ப்பு குறைவாக இருக்கப்போகும் இத்தொடரில் இந்தியா வெல்வதற்கு சுப்மன் கில் பேட்டிங்கில் அசத்துவது முக்கியம் என்றும் கபில் தேவ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த புதிய வேலையில் நான் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறேன். இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல. இப்போது நாம் எதிர்மறையாக பேச வேண்டாம். திறமையை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் அசத்துவார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடுவது எளிதாக இருக்காது”

- Advertisement -

சப்போர்ட் பண்ணுங்க:

“ஆனால் யாரேனும் ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சுப்மன் கில் கேப்டன்ஷிப் பதவிக்கு பொருத்தமாக இருப்பார். தேர்வாளர்கள் அனைத்து விஷயங்களையும் கணக்கிட்ட பின்பே நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளார்கள். அவருக்கு அணி மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை. இளமையாக இருக்கும் அவர் தனது சிறந்த செயல்பாடுகளை கொடுத்து அணி வீரர்களிடம் நல்ல செயல்பாடுகளைக் கொண்டு வருவார்”

இதையும் படிங்க: லக்னோ அணியை வீழ்த்திய கையோடு தல தோனியின் சாதனையை முறியடித்த ஜிதேஷ் சர்மா – விவரம் இதோ

“இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் அசத்துவது நல்லது. பும்ரா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கொடுத்து கேப்டனாக வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன். சுப்மன் கில் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் செயல்படுவது தன்னுடைய இலக்கை சாதிக்க உதவும். திடமான பேட்ஸ்மேனாக தெரியும் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். அவர் இங்கிலாந்தில் ரிலாக்ஸாக இருக்கக்கூடாது” என்று கூறினார்.

Advertisement