
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் இந்தியாவுக்காக அனில் கும்ப்ளேவுக்குப் பின் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அத்துடன் முத்தையா முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்று அஸ்வின் உலக சாதனையும் படைத்துள்ளார்.
மேலும் 2012 – 2024 வரை இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருப்பதற்கும் அஸ்வின் முக்கிய காரணமாக திகழ்ந்தார். அப்படிப்பட்ட அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் கடந்த பல வருடங்களாகவே அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதில்லை.
அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலிய தொடரிலும் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனாலேயே மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு வழிவிட்டு அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கருக்கு நிகராக அஸ்வினும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கபில் தேவ் பாராட்டியுள்ளார்.
அப்படிப்பட்ட அஸ்வினுக்கு தாமாக இருந்தால் வழியனுப்பும் போட்டியை நடத்தி மரியாதையுடன் விடைபெற வழி வகுத்திருப்பேன் என்று கபில் தேவ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த தலைமுறை எங்களை விட நன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த உலகம் நம்மை விட முன்னோக்கி செல்லாது”
“இந்தியாவின் மகத்தான ஒருவர் விடைபெற முடிவெடுத்ததை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அவருடைய முகத்தில் வலியை பார்த்தது சோகம். சச்சின் டெண்டுல்கர் அல்லது சுனில் கவாஸ்கருக்கு நெருக்கமாக ஒருவர் வருவார் என்று நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை. அப்படிப்பட்ட அஸ்வின் இங்கிருந்து சென்றுள்ளார். நான் அங்கே இருந்திருக்க விரும்புகிறேன். அங்கே இருந்திருந்தால் அவரை நான் இப்படி செல்ல விட்டிருக்க மாட்டேன். அவரை நான் நிறைய மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் அனுப்பியிருப்பேன். அவருக்கு நியாயமான ஃபேர்வெல் கொடுங்கள். அதற்கு அவர் தகுதியானவர். அவருடைய மிகப்பெரிய பங்களிப்பை யாரும் பொருத்த முடியாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2027 வரை 3 தொடர்.. இந்தியா – பாகிஸ்தானுக்கு சமமான வெற்றி.. சாம்பியன்ஸ் ட்ராபியை அறிவித்த ஐசிசி
அதே போல இவ்வளவு சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த அஸ்வினை வெற்றிகரமாக வழி அனுப்பி இருக்கலாம் என்று இந்திய ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவருக்கு போதுமான ஆதரவும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனாலேயே அஸ்வின் இப்படி பாதியிலேயே விடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.