
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை. எனவே சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுமா என்பது சந்தேகமாகவே காணப்படுகிறது.
ஏனெனில் கடந்த காலங்களில் தோனி, விராட் கோலி போன்ற மகத்தான கேப்டன்கள் தலைமையில் ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியாவால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. கடைசியாக 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டிராவிட் தலைமையில் கோப்பையை வென்ற இந்தியா கடந்த 18 வருடங்களாக தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே இம்முறையும் அனுபவமற்ற இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை வெல்வது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாததால் இம்முறை இந்தியா தோற்கும் என்று சில முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்களால் காலத்திற்கும் விளையாட முடியாது என்று ஜாம்பவான் கபில் தேவ தெரிவித்துள்ளார். எனவே விளையாடி முடித்தவர்களின் காலத்தைப் பற்றி பேசாமல் இளம் தலைமுறையால் என்ன செய்ய முடியும்? என்பதைப் பார்க்க வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
அந்த வகையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி நன்றாக விளையாடி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், எம்எஸ் தோனி, யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே ஆகியோரும் தற்போதைய இந்திய அணியில் இல்லை. அணியில் இல்லாதவர்கள் பற்றி சிந்திப்பதில் எந்த பயனும் இல்லை ”
“ஆம் அவர்கள் மிஸ் செய்யப்படுவார்கள். ஆனால் தற்போது வந்துள்ள அடுத்த தலைமுறைக்காக நாம் பெருமைப்பட வேண்டும். விராட், ரோஹித் தங்களுடைய வேலையை செய்து நம்மை பெருமையடைய வைத்தனர். தற்போது அடுத்த தலைமுறை அவர்களை விட என்ன பெரிதாக சாதிக்கிறார்கள் முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: அங்கயே தங்குனது மட்டுமல்ல.. பலமான சப்போர்டுடன் இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ராணா – விவரம் இதோ
“சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் நிறைய கேப்டன்ஷிப் செய்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானது. டெஸ்ட் போட்டிகளில் உங்களுக்கு அமைதி, பொறுமை வேண்டும். அதை சமாளிப்பதற்கான அனுபவமும் திறனும் அவரிடம் இருக்கிறது. எனவே நான் எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படவில்லை. இந்த அணி வெற்றி பெறுவதற்கு போதுமானது என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார்.