PAK vs NZ : 772 நாட்கள் கழித்து சாதித்த வில்லியம்சன், பாகிஸ்தானுக்கு ஊமை குத்து போட்ட நியூஸிலாந்து – முழுவிவரம் இதோ

Kane Willamson Pak vs NZ.jpeg
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளிலும் தோல்வியை சந்தித்தது. அதனால் வரலாற்றிலேயே மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள அந்த அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. அந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 7, ஷான் மசூட் 3, இமாம்-உல்-ஹக் 24, ஷாஹீல் 22 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற அனுபவ வீரர் சர்ப்ராஸ் அகமது கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை மீட்டெடுத்து 85 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான கம்பேக் கொடுத்து அவுட்டானார். அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த பாபர் அசாம் சதமடித்து 161 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஆகா சல்மான் தனது பங்கிற்கு சதமடித்து 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

நியூஸிலாந்தின் ஊமை குத்து:
நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு சுமாராக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்களை ஆரம்பம் முதலே நங்கூரமாகவும் நிதானமாகவும் எதிர்கொண்ட டாம் லாதாம் – டேவோன் கான்வே ஓப்பனிங் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான தொடக்கம் கொடுத்தது. அதை பிரிப்பதற்கு கேப்டன் பாபர் அசாம் கூட பந்து வீசிய நிலையில் அனைத்தையும் சிறப்பாக எதிர்கொண்டு 183 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் சதத்தை நெருங்கிய டேவோன் கான்வே துரதிஷ்டவசமாக 92 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அந்த தவறை செய்யாத டாம் லாதம் 10 பவுண்டரியுடன் சதமடித்து 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த ஜோடிக்கு பின் தனது கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சனுடன் கைகோர்த்து 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டார்ல் மிட்சேல் 42 ரன்களும் 5வது விக்கட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டாம் ப்ளண்டல் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன் 772 நாட்கள் கழித்து ஒரு வழியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதமடித்து நிம்மதியடைந்தார்.

- Advertisement -

கடைசியாக கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு இதே பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 238 ரன்கள் குவித்திருந்த அவர் அதன்பின் சதமடிக்க முடியாமல் விமர்சனங்களை சந்தித்த நிலையில் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த முதல் போட்டியிலேயே அந்த மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தன்னுடைய 25ஆவது டெஸ்ட் சதமடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 சதங்கள் விளாசிய 25வது வீரர் என்ற பெருமையும் முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோருடன் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் அவர் சமீப காலங்களில் தடுமாறிய நிலையில் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது உலக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அவரது சதத்துடன் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் 440/6 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து பாகிஸ்தானை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் கேன் வில்லியம்சன் 105* ரன்களுடனும் இஷ் சோதி 1* ரன்னுடன் உள்ளதால் 4வது நாளில் 500 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு சொந்த மண்ணில் சரி சமமான சவாலை கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க2022-ஆம் ஆண்டில் விராட் கோலி, கே.எல் ராகுலையே பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர் அஷ்வின் – அசத்தல் விவரம் இதோ

குறிப்பாக கடந்த தொடரில் இங்கிலாந்து அணியினர் அதிரடி சரவெடியாக அடித்து நொறுக்கினார்கள் என்றால் இத்தொடரில் பாகிஸ்தான் பவுலர்களை நியூசிலாந்து அணியினர் அதிரடியும் இல்லாமல் அமைதியும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே ஊமை குத்து போல அடித்து வருகிறார்கள். அதனால் சொந்த மண்ணில் மீண்டும் சுமாராக செயல்படும் பாகிஸ்தான் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement