விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடிய வந்த வேளையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
முதல் நியூசிலாந்து வீரராக கேன் வில்லியம்சன் அசத்தல் சாதனை :
இந்த அரையிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி ஏற்கனவே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணி எது? என்பதை நிர்ணயம் செய்யும் இரண்டாவது அரையிறுதி போட்டியானது நேற்று லாகூர் நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்ச ரச்சின் ரவீந்திர 108 ரன்களையும், கேன் வில்லியம்சன் 102 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை ஓரளவு சமாளித்து விளையாடி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது 94 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன் முதல் நியூசிலாந்து வீரராக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நேற்று அடித்த சதத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 19000 ரன்களை குவித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க : 100 ரன்ஸ்.. மில்லரின் போராட்டம் வீண்.. வெளியேறிய தெ.ஆ.. ஃபைனலில் நியூஸி 25 வருட சோகத்தால் இந்திய ரசிகர்கள் கவலை
இவருக்கு முன்னதாக ராஸ் டைலர் அந்த அணிக்காக 18,199 ரன்கள் குவித்ததே அதிக ரன்களாக இருந்த வேளையில் வில்லியம்சன் 19,075 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



