இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி திடீரென சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்தார். அப்போதிலிருந்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் எதிரணிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
அதே போல கேப்டனாக 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவை 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அவருடைய தலைமையில் முதல் முறையாக இந்தியா தொடரை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் சமீப காலங்களில் பேட்டிங்கில் விராட் கோலி பெரிய ரன்கள் குவிக்கவில்லை.
திடீர் ஓய்வு:
குறிப்பாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய இத்தொடரில் அவருடைய சுமாரான பேட்டிங் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் 36 வயதில் நல்ல ஃபிட்னஸ் கொண்டுள்ளார். எனவே தமக்குப் பிடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவரை விட மோசமாக விளையாடிய ரோஹித் சர்மாவை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ஓய்வு பெற்ற ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் விடை பெற்றார். இந்நிலையில் கிரிக்கெட்டர்கள் அனைவருமே மனிதர்கள் தான் என்பதால் ஒருநாள் ஓய்வு பெறுவதில் ஆச்சரியமில்லை என்று நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
வில்லியம்சன் கருத்து:
தாம், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடங்கிய பேப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி ஓய்வு பற்றி தி கார்டியன் பத்திரிகையில் வில்லியம்சன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஓய்வு குறித்து என்னுடைய முதல் சிந்தனை என்னவெனில் “இங்கே ஒரு முடிவு இருந்தாக வேண்டும்”. ஏனெனில் ஓய்வுக்கு முன்பு நீங்கள் பயணத்தில் இருக்கிறீர்கள். அந்தப் பயணத்தில் உங்களுக்கு நாட்டம் இருக்கும்”
இதையும் படிங்க: எல்லாம் கம்பீரோட சப்போர்ட்டா? இங்கிலாந்துலேயே இருக்க ஹர்ஷித் ராணாவுக்கு பறந்த உத்தரவு – விவரம் இதோ
“ஆனால் அது மற்ற மூவருக்கும் தொடர்பை ஏற்படுத்தாது. நாங்கள் அனைவரும் ஒரே சமயத்தில் விளையாடி வருகிறோம். ஒருவருக்கொருவர் நீண்ட காலம் போட்டியிட்டு வரும் நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துள்ளோம். எனவே அந்த ஓய்வில் நீங்களும் கொஞ்சம் பிரதிபலிப்பீர்கள். விராட் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவருடன் நீண்ட காலமாக பேசியுள்ளேன். அதே சமயம் நாங்கள் கிரிக்கெட்டர்கள் மட்டுமல்ல. மனிதர்கள் என்பதால் வாழ்க்கை மாறக்கூடியது என்பதை நீங்கள் உணர வேண்டும்” எனக் கூறினார்.



