IPL 2023 : நியூஸிலாந்தின் கனவில் விழுந்த பெரிய இடி, கேன் வில்லியம்சன் காயத்தால் ரசிகர்கள் சோகம் – காரணம் இதோ

Kane-Williamson
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியல் முதலிடம் பிடித்து கோப்பையை தக்க வைக்கும் வேலையை துவங்கியுள்ளது. ஆனால் அந்த அணிக்கு முதல் போட்டியிலேயே நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் ருதுராஜ் கைக்வாட் அடித்த ஒரு சிக்சர் பந்தை பவுண்டரி எல்லையில் இருந்து தாவி பிடித்து தடுக்க முயன்ற போது துரதிஷ்டவசமாக முழங்காலில் காயத்தை சந்தித்தார். அப்போதே கடுமையான வலியால் தவித்த அவர் மேற்கொண்டு விளையாடாமல் பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது.

அந்த நிலையில் காயம் பெரிதாக இருந்ததால் அதற்கு சிகிச்சை செய்து கொண்ட கேன் வில்லியம்சன் ஐபிஎல் 2023 தொடரிலிருந்து விலகுவதாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த சில வருடங்களாகவே எல்போ காயத்தால் தடுமாற்றமாக செயல்பட்டு விமர்சனங்களை சந்தித்த அவர் சமீபத்தில் தான் குணமடைந்து சதமடித்து நல்ல ஃபார்முக்கு திரும்பினார். அப்படிப்பட்ட நிலையில் நவீன கிரிக்கெட்டில் தரமான பேட்ஸ்மேனாக கொண்டாடப்படும் அவர் ஒரு போட்டியில் கூட முழுமையாக பேட்டிங் செய்வதற்கு முன்பாகவே காயமடைந்து வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கே ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

நியூஸிலாந்துக்கு அடி:
அதை விட அறுவை சிகிச்சை மேற்கொண்டு நடக்க முடியாமல் கை தடியின் உதவியுடன் இந்தியாவிலிருந்து அவர் புறப்பட்டு சென்ற வீடியோ ரசிகர்களை மேலும் சோகமடைய வைத்தது. இந்நிலையில் நாடு திரும்பியுள்ள கேன் வில்லியம்சன் அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருவதால் விரைவில் குணமடைந்து விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனாலும் தற்போதைய நிலைமையில் அவரது காயம் குணமடைவதற்கு குறைந்தது 6 – 7 மாதங்கள் நேரம் தேவைப்படும் என்பதால் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் பங்கேற்பது சந்தேகம் என்று நியூசிலாந்து வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது நியூசிலாந்து மட்டுமல்லாது ஒட்டு மொத்த ரசிகர்களையும் மிகப்பெரிய சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் நவீன கிரிக்கெட்டில் மகத்தான வீரரான அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் கேப்டனாக மிகச் சிறப்பாக வழி நடத்தி நியூஸிலாந்தை ஃபைனல் வரை அழைத்து சென்றார். இருப்பினும் ஃபைனலில் தோற்காத போதும் அதிக பவுண்டரிகளை அடித்தார்கள் என்பதற்காக கோப்பையை இங்கிலாந்துக்கு தூக்கி கொடுத்த ஐசிசி நியூசிலாந்தை ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டது.

- Advertisement -

அது இப்போதும் சர்ச்சையாகவே இருந்து வரும் நிலையில் அந்த உலகக் கோப்பையில் 578 ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்ட கேம் வில்லியம்சன் தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார். குறிப்பாக ஜாம்பவான் மார்ட்டின் க்ரோவுக்கு பின் தொடர் நாயகன் விருது வெல்லும் 2வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்த அவர் இம்முறை இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்காமல் போனால் அது எந்தளவுக்கு அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அந்த நிலையில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக ஒரு மாற்று பேட்ஸ்மேனை தேர்வு செய்துவிடலாம் ஆனால் அவருக்கு பதிலான மாற்று கேப்டனை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என்று நியூசிலாந்தின் பயிற்சியாளர் ஹாரி ஸ்டட் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேன் போன்ற வீரருக்கு மாற்று வீரரை நீங்கள் தொடக்கத்திலேயே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கேன் போன்ற கேப்டனுக்கு பதிலாக ஒருவரை எங்களது அணியில் கண்டறிவது மிகப்பெரிய வேலையாகும். தற்போதைக்கு நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்றாலும் உலகக்கோப்பையில் அவர் விளையாடுவது கடினமாகவே தெரிகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IPL 2023 : ரஹானேவின் ஆல் டைம் சாதனையை உடைத்து ராஜஸ்தானின் ராயலாக – சஞ்சு சாம்சன் வரலாற்று சாதனை

மொத்தத்தில் நியூசிலாந்தின் 2023 உலக கோப்பை கனவில் இடி விழுந்தது போல் அமைந்துள்ள இந்த செய்தி அனைத்து ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக டாம் லாதம் உலக கோப்பையில் நியூஸிலாந்தை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement