
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் ஆட்டம் பிப்ரவரி 19-ஆம் தேதி கராச்சி நகரில் துவங்கியது. இந்த போட்டியில் மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக வில் யங் 107 ரன்களையும், டாம் லாதம் 118 ரன்களையும், க்ளென் பிலிப்ஸ் 61 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய முன்னாள் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர வீரருமான கேன் வில்லியம்சன் 2 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதன்மூலம் அவர் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார். அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒற்றை இலக்க என்ற ரன்களில் ஆட்டமிழந்த கேன் வில்லியம்சன் அதனை தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தான் விளையாடிய 36 ஒருநாள் இன்னிங்ஸ்களில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களில்தான் ஆட்டமிழந்து வந்தார்.
ஆனால் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒற்றை இலக்க ரன்களில் அதாவது 10 ரன்களை கூட தொடாமல் 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். தற்போது 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் தங்களது இந்த பயனத்தை மீண்டும் வெற்றியுடன் ஆரம்பிக்க போராடி வருகிறது.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ
காயம் காரணமாக கடந்த பல தொடர்களை தவறவிட்ட கேன் வில்லியம்சன் சமீபத்தில் தான் மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே அவர் சரிவினை சந்தித்துள்ளது அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும். இருப்பினும் வில்லியம்சன் போன்ற பெரிய பிளேயர் இதிலிருந்து எளிதாக வெளிவருவார் என்று நம்பலாம்.