நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் டீன் எல்கர் ஓய்வு பெற்ற நிலையில் ரபாடா போன்ற முக்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் எஸ்ஏ டி20 தொடரில் விளையாடுவதால் களமிறங்கவில்லை.
அதனால் நெய்ல் பிராண்ட் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி இத்தொடரில் விளையாடுகிறது. அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி நான்காம் தேதி மவுண்ட் மௌங்கனி நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மற்றொரு துவக்க வீரர் டாம் லாதமும் 20 ரன்களில் நடையை கட்டினார்.
அசத்தும் வில்லியம்சன்:
அதனால் 39/2 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக நட்சத்திர அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இளம் வீரர் ரச்சின் ரவீந்திர ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் கேன் வில்லியம்சன் தமக்கே உரித்தான கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுபுறம் கடந்த 2023 உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் ரவீந்தரா சொந்த மண்ணில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அரை சதமடித்தார்.
அந்த வகையில் நங்கூரமாக ஜோடி சேர்ந்து தென்னாபிரிக்காவுக்கு சவாலை கொடுத்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது விக்கெட்டுக்கு 119* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமும் அடித்தது. அவர்களுடைய அபாரமான ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் 258/2 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.
களத்தில் கேன் வில்லியம்சன் 112* ரன்கள், ரச்சின் ரவீந்திரா 118* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய நவீன கிரிக்கெட்டின் தரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த வருடம் சந்தித்த காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து தற்போது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: இங்கிலாந்தின் லெஜெண்டையே மலிங்கா மாதிரி தெறிக்க விட்டுட்டாரு.. அவரை தொடுறது கஷ்டம்.. ப்ராட் பாராட்டு
அந்த வரிசையில் அடித்த இந்த சதத்தையும் சேர்த்து கடைசி 9 இன்னிங்ஸில் அவர் 5 சதங்கள் அடித்து தன்னுடைய தரத்தை நிரூபித்து நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார் என்றே சொல்லலாம். அது போக இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து அவர் 97 போட்டிகளில் 169 இன்னிங்ஸில் 30 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 30 சதங்கள் அடித்த 4வது வீரர் என்ற அசத்தல் சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 159
2. ஸ்டீவ் ஸ்மித் : 162
3. மேத்தியூ ஹைடன் : 167
4. கேன் வில்லியம்சன் : 169*
5. ரிக்கி பாண்டிங் : 17
6. சுனில் கவாஸ்கர் : 174