ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19ஆம் தேதி துவங்குகிறது. இம்முறை அத்தொடரில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் கடைசி முறையாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
எனவே அவர்களுடைய ஆட்டத்தைப் பார்க்க அனைவரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2017 கொல்கத்தா ஒருநாள் போட்டியில் விராட் கோலி வேற லெவல் பிளேயர் என்பதை புரிந்து கொண்டதாக ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 252 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி வெறும் 8 பவுண்டரியுடன் 92 (107), ரஹானே 55 (64) ரன்கள் எடுத்தனர்.
வேற லெவல் விராட்:
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 202 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் ஹாட்ரிக் உட்பட 3, புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். அப்போட்டியில் வெப்பமான சூழ்நிலை காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சாதாரணமாக ஃபீல்டிங் செய்யவே தடுமாறியதாக ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் 60 ரன்களை சிங்கிள் மற்றும் டபுள், ரன்களாக ஓடி எடுத்த விராட் கோலி ஆஸ்திரேலியாவை திணறடித்ததாக ரிச்சர்ட்சன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தாவில் மிகவும் வெப்பமான சூழ்நிலையில் நடைபெற்ற ஒரு போட்டி எனக்கு நினைவிருக்கிறது. மேத்தியூ வேட் விக்கெட் கீப்பராக தடுமாறினார்”
ரிச்சர்ட்சன் வியப்பு:
“அவருக்கு ஆடம் ஜாம்பா தண்ணீர் கொடுத்து விட்டு சென்ற பின் கமின்ஸ் பந்து வீச வந்தார். அந்த வகையில் நாங்கள் வெப்பமான சூழ்நிலையால் மூச்சு திணறிக் கொண்டிருந்தோம். ஆனால் விராட் கோலி மட்டும் தம்மை சுற்றி ஏசி (குளிர்ச்சியான சூழ்நிலை) போட்டது போல எளிதாக சிங்கள், டபுள் ரன்களை ஓடி ஓடி எடுத்தார். அன்றைய நாளில் விளையாடிய யாரிடம் வேண்டுமானாலும் நீங்கள் கேட்டுப் பாருங்கள்”
இதையும் படிங்க: பேருந்து பின்னாடியே போன நான் அவருக்கு எதிராகவே பந்துவீசும் அளவுக்கு வளர்ந்தேன் – வருண் சக்கரவர்த்தி கருத்து
“வெப்பத்தால் நிறைய வீரர்கள் தங்களுடைய கழுத்தில் பனிக்கட்டி துண்டை போட்டிருந்தது வீடியோவில் தெரியும். யாருடைய முகமும் மலர்ச்சியாக இல்லை. அந்த சூழ்நிலையில் விராட் விக்கெட்டை எடுத்தால் மைதானமே அமைதியாகி விடும். ஆனால் அதை எடுப்பதற்கான எனர்ஜி எங்களிடம் இல்லை. அது உயர்தரமான விளையாட்டு வீரர்கள் இருக்க விரும்பாத ஒரு சூழ்நிலையாகும். ஆனால் அன்றைய நாளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் விராட் கோலி முற்றிலும் வித்தியாசமான லெவலைக் கொண்டவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்று கூறினார்.



