பாகிஸ்தான் மண்ணில் வரும் பிப்ரவரி மாதம் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாத இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்து வருகிறது. சொல்லப்போனால் 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
அத்துடன் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது. அதே போன்ற கோரிக்கையை இம்முறையும் இந்திய அணி வைத்து வருவது பாகிஸ்தான் வாரியத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்தியா வரவில்லையெனில் பாகிஸ்தானுக்கு போதுமான ஸ்பான்சர்ஷிப் வருமானங்கள் கிடைக்காது.
இந்தியா – பாகிஸ்தான்:
இந்நிலையில் நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்சனையை நிறுத்த இந்திய அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐசிசி முடிவு எடுக்கும். ஆனால் இப்போது நிரந்தரமான தீர்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக நான் நினைக்கிறேன்”
“ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடந்து இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லையெனில் பின்னர் ஐசிசி அதே முடிவை அனைத்து தொடர்களுக்கும் எடுக்க வேண்டும். அதாவது இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும். என்னுடைய கருத்துப்படி மற்றொரு தீர்வும் இருக்கிறது. அதாவது இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடரில் மோதும் வரை ஐசிசி தொடர்களில் மோதும் வகையில் அட்டவணையை அமைக்கக்கூடாது”
கம்ரான் அக்மல் கருத்து:
“அவர்கள் மீண்டும் பழையது போல் விளையாட ஆரம்பித்த பின்பே ஐசிசி தொடர்களில் விளையாட வேண்டும். ஏனெனில் இது போன்ற சூழ்நிலைகளை பார்த்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். அவை அனைத்தும் போதும். 2016 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடிய போட்டி தரம்சாலா மைதானத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது”
இதையும் படிங்க: பும்ரா ஜோக் செய்றாரு வேற லெவல்.. ஆஸியை அங்க இந்தியா நொறுக்குவாங்க நினைக்கல.. குக், ஃபின் பாராட்டு
“அதே போல கடந்த வருடம் அகமதாபாத் நகரில் பாகிஸ்தான் பிரச்சினைகள் இருந்த சூழ்நிலையில் விளையாடியது. எனவே இம்முறை பாகிஸ்தான் வலுவான முடிவை எடுத்து அதில் நிற்க வேண்டும். அது தான் பாகிஸ்தானுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கும். ஏனெனில் ஒன்று அரசியல் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாட விரும்புவதில்லை. மற்றொன்று எங்கள் அணியுடன் பாகிஸ்தானில் விளையாட அவர்கள் விரும்புவதில்லை. இது இருதலை பட்சமாக இருக்கிறது” என்று கூறினார்.



