
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று ஜூன் 11-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் குவித்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 169 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தென்னாப்பிரிக்க அணியானது இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிஸோ ரபாடா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 5 விக்கெடுக்களின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவின் முக்கிய சாதனை ஒன்றையும் தகர்த்துள்ளார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 50+ விக்கெட்டுகளை சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 64 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஒவ்வொரு 39 பந்துகளுக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
அதனை தற்போது தகர்த்துள்ள ரபாடா 38 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒவ்வொரு 38 பந்துகளிலும் அவர் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரராக இருந்த ஆலன் டொனால்டையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இதையும் படிங்க : ஒரு வருஷமா அவர் சூப்பர் பார்ம்ல இருக்காரு.. அவரை இங்கிலாந்து கூட்டிட்டு போயிருக்கனும் – கங்குலி ஆதங்கம்
ஒட்டு மொத்தமாக 332 விக்கெட்டுகளுடன் தென்னாப்ரிக்க அணி சார்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.