ஜெய்ஸ்வால் மட்டுமே நாயகன்.. தூக்கி எரியப்பட்ட விராட், ரோஹித்.. பும்ரா மகுடத்தை பறித்த ரபாடா

ICC Rankings
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா அவமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

அது போக கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வந்த இந்தியாவின் வெற்றி நடையும் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் மட்டும் நாயகன்:

அதில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 77 (66) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடிய ஜெய்ஸ்வால் கூடுதல் புள்ளிகளை பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சொல்லப்போனால் டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அவர் மட்டுமே 3வது இடத்தை பிடித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். மறுபுறம் இரண்டாவது போட்டியில் ஏமாற்றத்தைக் கொடுத்த ரிஷப் பண்ட் 5 இடங்கள் சரிந்து 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதே போல புனேவில் சுமாராக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்த விராட் கோலி டாப் 10 பட்டியலிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். முந்தைய தரவரிசையை விட 6 இடங்களை இழந்துள்ள அவர் தற்போது 14வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு சமமாக மோசமாக விளையாடிய ரோஹித் சர்மா டாப் 20 பட்டியலிலிருந்து தூக்கப்பட்டு 24வது இடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

ரபாடா சாதனை:

சுப்மன் கில் 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே போல வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா அபாரமாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார். அதனால் இந்தியாவின் பும்ராவை முந்தியுள்ள அவர் உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்ற மகுடத்தை தனதாக்கி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவை ரோஹித் நொறுக்குனாறே.. அந்த தோல்வி தான் நான் ரிட்டையராக காரணம்.. மேத்தியூ வேட் பேட்டி

மறுபுறம் முதலிடத்தில் இருந்த பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகிய இந்திய பவுலர்கள் 3, 4, 8வது இடத்திற்கு சரிந்துள்ளார்கள். இருப்பினும் டாப் 10 ஆல் ரவுண்டர்கள் பிரிவில் தொடர்ந்து ஜடேஜா மற்றும் அஸ்வின் முதல் 2 இடங்களை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்கள். அக்சர் பட்டேல் 7வது இடத்தில் நீடிக்கிறார். அணிகள் தர வரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருக்கும் நிலையில் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement