வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அத்தொடரின் 2வது போட்டியில் சாய் சுதர்சன் 87 ரன்கள், 39 ரன்கள் அடித்து ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் ஒரு அரை சதை மட்டுமே அடித்திருந்தார்.
அதனால் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் பெரிய ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். அந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் சிறப்பாக துவங்கிய சுதர்சன் 87 ரன்னில் அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சுதர்சன் எளிதாக அடிக்க வேண்டிய சதத்தை தவற விட்டதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
தவற விட்ட சுதர்சன்:
இனிமேல் அது போன்ற வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்றும் அவர் சுதர்சனை அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் போட்டி மிகுந்த இந்திய அணியில் சதம் அடிக்கவில்லை என்று சொல்லி சுதர்சன் கழற்றி விடப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 175 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடத் தகுதியுடையவர் என்றும் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “சுதர்சனைப் பொறுத்த வரை இன்னும் கொஞ்சம் நாம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தன்னுடைய பின்னங்காலில் அவர் மிகவும் நன்றாக விளையாடுகிறார். அதற்காக அடுத்த 2 – 3 தொடர்களில் அவர் எளிதாக இடம் பிடிப்பார் என்று நான் சொல்ல மாட்டேன்”
ஸ்ரீகாந்த் அட்வைஸ்:
“அவர் அப்படிப்பட்ட எளிதான சதத்தை போக விட்டிருக்கக்கூடாது. நீங்கள் 87 ரன்கள் அடிப்பதற்கும் 99 – 100 ரன்கள் தொடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒருமுறை நீங்கள் சதத்தை தொட்டுவிட்டால் அது வித்தியாசமான லெவெலாகும். 50, 70, 90 போன்ற ரன்கள் சதத்துடன் ஒப்பிடுவதில் எந்த பயனையும் ஏற்படுத்தாது. அங்கே தான் சுதர்சன் தவற விட்டார்”
இதையும் படிங்க: கில் இருக்கட்டும்.. இந்தியாவின் ஆல் ஃபார்மட் வருங்காலம் ஜெய்ஸ்வாலை ட்ராப் செய்யாதீங்க.. மதன் லால்
“ஜெய்ஸ்வால் 100% ஆல் ஃபார்மட் பிளேயர். அவருடைய டி20 ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் நன்றாகவே விளையாடுவார். ஆனால் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருடைய ஆட்டம் இயற்கையானது. அவர் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தில் மாற்றம் செய்யாமல் விளையாடுகிறார். மித வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எளிதாக அடிக்கிறார்” என்று கூறினார்.



