
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியைத் தவிர்த்தது. அந்த வெற்றிக்கு விராட் கோலி 74*, ரோஹித் சர்மா சதத்தை 121* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார்கள்.
அதனால் 2027 உலகக் கோப்பையிலிருந்து தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர் என்று சொல்லலாம். முன்னதாக 2027 உலகக் கோப்பைக்கு தூரம் இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே ஆஸ்திரேலியாவில் 300 ரன்கள் அடித்தாலும் இல்லையென்றாலும் விராட், ரோஹித்துக்கு உலகக் கோப்பை வாய்ப்பை இப்போதே உறுதிப்படுத்த முடியாது என்றும் அகர்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படியெல்லாம் சொல்லி அவர்களுடைய மனதில் பயத்தை விதைக்க வேண்டாம் என்று அகர்கரை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை தாம் தலைவராக இருந்தால் அவர்களை 2027 உலகக்கோப்பையில் தேர்ந்தெடுப்பேன் என்றும் ஸ்ரீகாந்த் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ரோஹித், விராட் 2027க்கு தயாராகி விட்டார்கள். எனது கருத்துப்படி நிச்சயம் ரோஹித் உலகக் கோப்பையில் விளையாடுவார். இங்கே வயது பிரச்சனையைக் கொண்டு வராதீர்கள். அவர் 40 அசத்த மாட்டார் என்று சொல்வதை நிறுத்துங்கள். ஃபிட்டாக இருக்கும் அவர் நன்றாக பேட்டிங் செய்து ஸ்லிப் கேட்ச்களை பிடிக்கிறார். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்? சிட்னியில் அவர் 2019 உலகக் கோப்பையில் விளையாடியதைப் போலவே அசால்டாக விளையாடினார்”
“6, 7வது கியரில் செல்லாமல் 3, 4வது கியரில் விளையாடினார். மறுபுறம் 25 வயதுடைய வீரரை போல ஃபிட்னஸை கொண்டிருக்கும் விராட் 45 வயது வரை விளையாடலாம். எனவே அவர்களை அச்சுறுத்தி பயத்தை நிறுவாதீர்கள். அவர்களை தனியாக விடுங்கள். சொல்லப்போனால் அணிக்கு முக்கியமானவர்கள் என்று அவர்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இதான் டெம்ப்ளேட்.. ஆஸி டி20 தொடரில் சூர்யகுமாரின் மோசமான ஃபார்ம் பற்றி கவலையில்ல.. கம்பீர் பேட்டி
“நீங்கள் இருவரும் முக்கியமானவர்கள் என்பதால் உங்களை சுற்றி அணியை உருவாக்கப் போகிறோம். எனவே ஃபிட்டாக இருங்கள் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும். இதைத் தேர்வுக்குழு செய்தால் அது இந்திய அணிக்கும் அவர்களுக்கும் நல்லதாக இருக்கும். ஒருவேளை நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால் “2027 உலகக் கோப்பைக்கு ஃபிட்டாக இருந்து கோப்பையை வென்று கொடுங்கள்” என்று விராட், ரோஹித்திடம் நேரடியாக சொல்வேன்” எனக் கூறினார்.