IND vs SA : 4 சிக்சர் அடிக்கும் தன்னம்பிக்கை இருந்தும் ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு – போராட்ட தோல்விக்குப் பின் சாம்சன் பேசியது இதோ

Sanju-Samson-2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பை பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் அணி பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா மழையால் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் அதிரடியாக 75* ரன்களும் ஹென்றிச் க்ளாஸென் 74* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Sanju Samson Tabriz Shamsi

- Advertisement -

அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் தவான் 4, கில் 3, ருதுராஜ் 19, இஷான் கிசான் 20 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 51/4 என திண்டாடிய இந்தியாவுக்கு அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 8 பவுண்டரியுடன் 50 (37) ரன்களும் ஷார்துல் தாகூர் 33 (31) ரன்களும் சஞ்சு சாம்சன் 86* (63) ரன்களும் குவித்து முழு மூச்சுடன் போராடிய போதிலும் கடைசி வரை அதிலிருந்து மீள முடியாமல் 40 ஓவரில் 240/8 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.

மிஸ் ஆகிடுச்சு:
இப்போட்டியில் மழையால் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய டாப் 4 பேட்ஸ்மேன்கள் 50க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனெனில் 51/4 என்ற நிலைமையில் களமிறங்கி ஷ்ரேயஸ் உடன் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் தாகூருடன் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்களை விளாசி போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று போராடிய சஞ்சு சாம்சன் சிறப்பான அணுகுமுறையில் விளையாடினார்.

Sanju Samson

குறிப்பாக கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் தப்ரிஸ் சம்சியை பந்தாடிய அவர் 6, 4, 4, 0, 4, 1 என 19 ரன்களை விளாசி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். இந்நிலையில் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை தொடர்ந்து அடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தும் 2 பந்துகளை தவற விட்டதாக தெரிவிக்கும் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக இதுபோல் பெருமையுடன் விளையாடி வெற்றி காண்பதற்காக முன்பெல்லாம் 2 மணி நேரங்கள் செய்யும் வலை பயிற்சியை இப்போதெல்லாம் 4 மணி நேரமாக அதிகப்படுத்தியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி லக்னோ போட்டிக்குப் பின் அவர் பேசியது பின்வருமாறு. “களத்தில் சில நேரம் கழிப்பதை நான் விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் இந்திய ஜெர்ஸியுடன் விளையாடுவது மேலும் சிறப்பம்சமாகும். வெற்றி பெற எப்போதும் நினைக்கும் நாங்கள் இன்று விளிம்பில் தோற்று விட்டோம். அதிலும் வெறும் 2 ஷாட் வித்தியாசத்தில் தோற்று விட்டோம். இருப்பினும் என்னுடைய பங்களிப்பை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தென் ஆப்பிரிக்காவின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் ஷம்சி சுமாராக பந்து வீசியதால் அவரை குறி வைக்க நாங்கள் திட்டமிட்டோம். கடைசியில் அவருக்கு ஒரு ஓவர் மிஞ்சியுள்ளது என்பதை நான் அறிந்திருந்தேன்”

Samson

“அதிலும் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டால் என்னால் 4 சிக்சர்கள் அடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாடினேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. இப்போதெல்லாம் 5 ஓவரில் 50 ரன்கள் அடிப்பது கடினமல்ல. மேலும் இந்திய கிரிக்கெட்டில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருப்பதும் அவர்களை ரசிகர்கள் கொண்டாடுவதும் நம்முடைய அதிர்ஷ்டமாகும். அதனால் எதிர்ப்பார்ப்பும் அதிகரிக்கும் போது அதை சமாளிக்க நாங்கள் அதிகமாக தயாராக வேண்டியுள்ளது. அந்த வகையில் பொதுவாக 2 மணி நேரங்கள் பயிற்சி செய்யும் நான் தற்போது 4 மணி நேரங்கள் பயிற்சி செய்கிறேன்” என்று கூறினார்.

அத்துடன் புதிய பந்தில் பேட்டிங் சவாலாக இருந்ததால் டாப் 4 பேட்ஸ்மேன்களை குறை கூறுவதில் எந்த அர்த்தமுமில்லை என்று தெரிவித்த சஞ்சு சாம்சன் இந்திய அணி பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் இன்னும் முன்னேற வேண்டியுள்ளதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் தற்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மிகச் சிறந்த பினிஷராக இருப்பதால் அவருக்கு எதிராக பந்து வீசுவது கடினமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

Advertisement