ஹாட்ரிக் எடுத்து சாதித்தது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையும் படைத்த அயர்லாந்து வீரர் – என்ன தெரியுமா

Josh Little IReland
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வரலாற்றின் 8வது ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நவம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 37வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த அயர்லாந்தை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து எதிர்கொண்டது. புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 185/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு 52 ரன்கள் அதிரடியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஃபின் ஆலன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 32 (18) ரன்கள் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய டேவோன் கான்வே 28 (33) ரன்களில் நடையை காட்டினார்.

அப்போது வந்த கிளன் பிலிப்ஸ் 17 (9) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் கேன் வில்லியம்சன் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக பேட்டிங் செய்து தனது அணியை வலுப்படுத்தினார். குறிப்பாக 6வது ஓவரில் களமிறங்கிய அவர் 19 ஓவர்கள் வரை சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 61 (35) ரன்கள் எடுத்திருந்த போது ஜோஸ் லிட்டில் வீசிய 2வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஹாட்ரிக் நாயகன்:
அப்போது களமிறங்கிய ஜிம்மி நீசம் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி சென்றார். அடுத்ததாக வந்த மிட்சேல் சாட்னரையும் அதே போல எல்பிடபிள்யூ செய்த ஜோஸ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்து நியூசிலாந்தை 200 ரன்களை தொட விடாமல் செய்தார். அதை தொடர்ந்து 186 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ஆண்டி பால்பிரின் 3 சிக்சருடன் 30 (25) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே பால் ஸ்டிர்லிங் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 37 (27) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதை திருப்புமுனையாக மாற்றிய நியூசிலாந்து அடுத்து வந்த டுக்கர் 2 (7) டெக்டர் 2 (7) கெரத் டிலானி 10 (8) ஜார்ஜ் டாக்ரெல் 23 (15) குர்ட்டிஸ் கேம்பர் 7 (7) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கியது. அதனால் 20 ஓவர்களில் 150/9 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து தன்னுடைய கடைசி போட்டியிலும் ஆறுதல் வெற்றியை பெற முடியாமல் இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. மறுபுறம் துல்லியமாக பந்து வீசிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாக்கி பெர்குஷன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அந்த அணி குரூப் 1 புள்ளி பட்டியலில் பங்கேற்ற 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து 7 புள்ளிகளுடன் இந்த உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. அதனால் ஹாட்ரிக் எடுத்து அசத்திய ஜோஸ் லிட்டில் போராட்டமும் வீணானது. இருப்பினும் டி20 உலக கோப்பைகளில் ஹாட்ரிக் எடுத்த 2வது அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஒட்டுமொத்த உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 6வது பந்து வீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார்.

அந்த பட்டியல்:
1. பிரட் லீ (ஆஸ்திரேலியா) : வங்கதேசத்துக்கு எதிராக, 2007
2. குர்ட்டிஸ் கேம்பர் (அயர்லாந்து) : நெதர்லாந்துக்கு எதிராக, 2021
3. வனிந்து ஹசரங்கா (இலங்கை) : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2021
4. ககிஸோ ரபாடா (தென்ஆப்பிரிக்கா) : இங்கிலாந்துக்கு எதிராக, 2021
5. கார்த்திக் மெய்யப்பன் (அமீரகம்) : இலங்கைக்கு எதிராக, 2022*
6. ஜோஸ்வா லிட்டில் (அயர்லாந்து) : நியூசிலாந்துக்கு எதிராக, 2022*

அதை விட இந்த வருடம் மொத்தமாக 39 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற நேபாளின் சந்திப் லெமிசேன் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோஸ் லிட்டில் (அயர்லாந்து) : 39* (2022)
2. சந்தீப் லெமிஷேன் (நேபாள்) : 38* (2022)
3. வணிந்து ஹஸரங்கா (இலங்கை) : 36 (2021)
4. தப்ரிஸ்க் சம்சி (தென் ஆப்பிரிக்கா) : 36 (2021)

Advertisement