ராஜஸ்தானின் புதிய சூப்பர் ஸ்டாராக ஜோஸ் பட்லர் ! 10 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை – என்ன தெரியுமா

Jos Buttler 116
- Advertisement -

அசத்தலாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் ஒரு மாதங்களாக மும்பை நகரில் பல திரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 30-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 8 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி அடைந்தது. இருப்பினும் கூட ஏற்கனவே 8 தோல்விகளை பதிவு செய்து விட்டதால் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்த வருடம் ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 67 (52) ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 (9) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ரிலே மெரிடித் மற்றும் ரித்திக் ஷாக்கீன் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 2 (5) இஷான் கிசான் 26 (18) போன்ற தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட சரிவை அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரி செய்தனர். இதில் 51 (39) ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவும் 35 (30) ரன்கள் எடுத்து திலக் வர்மாவும் கடைசி நேரத்தில் அவுட்டாக இறுதியில் டிம் டேவிட் 20* (9) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவர்களில் 161/5 ரன்களை எடுத்த மும்பை முதல் வெற்றியை பதிவு செய்தது.

MI vs RR Ishan Kishan

மறுபுறம் ட்ரெண்ட் போல்ட், அஷ்வின், சஹால் போன்ற ராஜஸ்தானின் தரமான பவுலர்கள் தலா 1 விக்கெட் எடுத்து வெற்றிக்காக போராடினாலும் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் கோட்டை விட்ட அந்த அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு தேவதூத் படிக்கல் 15 (15) கேப்டன் சஞ்சு சாம்சன் 16 (7) டார்ல் மிட்சேல் 17 (20) போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதே தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

ரன் மழை பட்லர்:
அந்த நிலைமையில் அந்த சரிவைச் சரி செய்வதற்காக வழக்கம் போல அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சற்று மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அதிக பந்துகளை சந்தித்து குறைந்த ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த அவர் 15-வது ஓவரை வீசிய ரித்திக் ஷாக்கீன் ஓவரில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்பதுபோல் அதிரடி சரவெடியாக தொடர்ந்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு சிக்ஸர் மழை பொழிந்து 67 (52) ரன்கள் எடுத்தார்.

Jos Buttler 103

இப்படி இந்த போட்டி மட்டுமல்லாது இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 566* ரன்களை 70.75 என்ற அற்புதமான சராசரியில் 155.07 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து ரன் மழை பொழிந்து வரும் அவர் ஆரஞ்சு தொப்பியை தன்னகத்தே வைத்துள்ளார்.

அதிலும் 3 சதங்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் பகுதியில் 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மென் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் போன்ற சரித்திர சாதனைகளை படைத்துள்ளார். இப்படி மிரட்டலான பேட்டிங் செய்து வரும் அவருக்கு 2016இல் 973 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மன் என்ற விராட் கோலியின் ப்ரம்மாண்ட சாதனையை முறியடிக்கும் பொன்னான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

rahane

10 வருட சாதனை:
அதற்கு முன்பாக ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் அவர் இப்போதே படைத்துள்ளார். ஆம் இதற்கு முன் கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்காக விளையாடிய இந்திய வீரர் அஜிங்கியா ரஹானே அந்த சீசனில் அற்புதமாக பேட்டிங் செய்து 6 அரை சதங்கள் உட்பட 16 போட்டிகளில் 560 ரன்கள் எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. தற்போது அதை 10 வருடங்கள் கழித்து முறியடித்துள்ள ஜோஸ் பட்லர் வெறும் 9 போட்டிகளிலேயே 566* ரன்களைக் குவித்து ராஜஸ்தானின் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

Advertisement