
இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 166 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தப் போட்டியில் சிவம் துபே காயத்தில் இருந்து குணமடைந்து விளையாடினார்.
இருப்பினும் கடைசி ஓவரின் 5வது பவுன்சர் பந்தில் தலையில் அடி வாங்கிய அவரை இந்திய அணியின் மருத்துவர் சோதித்து எதுவும் பிரச்சனை இல்லை என்று சொன்னார். அதனால் கடைசிப் பந்தை எதிர்கொண்ட துபே ரன் அவுட்டானார். அடுத்ததாக இங்கிலாந்து பேட்டிங் செய்த இன்னிங்ஸில் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அறிமுகமாக களமிறங்கி முக்கியமான 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.
ஆனால் ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதிலாக பவுலரான ராணா எப்படி விளையாடலாம் என்று மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தப் போட்டியின் தோல்விக்கு அதை சாக்கு சொல்ல முடியாது என்றாலும் ராணாவின் தேர்வு நியாயமானது அல்ல என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்துள்ளார். எனவே இது பற்றி போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத்திடம் கேட்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி பட்லர் பேசியது பின்வருமாறு. “அது சரியான பதில் மாற்று வீரராகத் தெரியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ஏனெனில் துபே 25 மைல் வேகத்தில் வீசுபவர் கிடையாது. ராணாவும் பேட்டிங்கில் முன்னேறியவர் கிடையாது. இருப்பினும் அது போட்டியின் ஒரு அங்கமாகும். இந்தப் போட்டியை நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்”
“ஆனால் நாங்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களிடம் அது பற்றி விவாதிக்கப்படவும் இல்லை. நான் பேட்டிங் செய்ய வந்த போது ஹர்ஷித் ராணா யார்? என்று நினைத்தேன். அதற்கு அவர்கள் சப்ஸ்டிடியூட் வீரராக வந்துள்ளார் என்று சொன்னார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. போட்டி நடுவர் அந்த முடிவை எடுத்ததாக என்னிடம் சொன்னார்கள்”
இதையும் படிங்க: ஹர்ஷித் ராணா பிரச்சனை விடுங்க.. ஹார்டிக் பாண்டியாவிற்கும் நடந்த கொடுமையை பாத்தீங்களா? – என்ன ஆனது?
“அது பற்றி எதையும் சொல்வதற்கு எங்களுக்கு வாய்ப்பும் வழங்கவில்லை. எனவே அது பற்றிய தெளிவை பெறுவதற்காக ஜவஹல் ஸ்ரீநாத்திடம் நாங்கள் சில கேள்விகளை வைக்க உள்ளோம். அதே சமயம் அந்த முடிவு இந்தப் மொத்த போட்டியிலும் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் என்று சொல்லவில்லை. ஆனால் அதில் இன்னும் தெளிவைப் பெற நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.