இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் நவீன வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்தின் கேப்டனாக வென்று சாதனை படைத்த அவர் ஐபிஎல் தொடரில் 2022 சீசனில் 863 ரன்கள் விளாசினார். அதனால் ராஜஸ்தானை 2008க்குப்பின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார்.
அப்படிப்பட்ட திறமையும் தரமும் நிறைந்த ஜோஸ் பட்லர் 2023 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுவது என்று தெரியாமல் தவித்ததாக கூறியுள்ளார். ஏனெனில் தன் மீது கடந்த வருடத்தைப் போல இம்முறையும் பெரிய ரன்கள் குவிப்பார் என்ற தேவையற்ற அழுத்தம் உண்டானதாக அவர் கூறியுள்ளார். அந்த அழுத்தமான சூழ்நிலையில் விராட் கோலி தமக்கு உதவி செய்ததாகவும் பட்லர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் அட்வைஸ்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் நான் 863 ரன்கள் குவித்தேன். ஆனால் விராட் கோலி ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (973) அடித்து சாதனை படைத்தவர். அது அற்புதமான சாதனை. உண்மையில் அதற்கடுத்த வருடம் எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் எப்படி நான் விளையாடப் போகிறேன் என்ற அழுத்தம் ஏற்பட்டது”
“அப்போது ஆர்சிபி பயிற்சி எடுத்த மைதானத்தில் நாங்களும் பயிற்சிகளை செய்தோம். அப்போது விராட் கோலியிடம் சில கேள்விகளை கேட்கலாம் என்று நினைத்தேன். எப்படி நீங்கள் எதிர்பார்ப்புகளை கையாள்கிறீர்கள்? என்பது முக்கியமான கேள்வியாகும். ஏனெனில் உலகில் அவரை விட வேறு எந்த வீரர் மீதும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்க முடியாது”
சிறந்த ஐபிஎல்:
“இந்தியாவில் இருக்கும் 1.5 பில்லியன் மக்கள் விராட் கோலி எப்போதும் ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். என்னுடைய அந்தக் கேள்வியை தாராளமானதாக ஏற்றுக்கொண்ட விராட் கோலி உதவி செய்தார். நீங்கள் ஒரு வருடம் சிறப்பாக விளையாடியிருக்கலாம் ஆனால் அதை அடுத்த வருடமும் செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமென விராட் கோலி என்னிடம் சொன்னார்”
“அப்படி செய்தால் உங்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைப் போடுவீர்கள். வாழ்க்கையில் எதுவும் பரவாயில்லை என்று செல்ல வேண்டும். பின்னர் விராட் கோலி தனது சொந்த விளையாட்டில் சில நேரங்களில் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதைப் பற்றி சொன்னார். அதாவது “சில நேரங்களில் எனக்கே எப்படி விளையாடுவது என்பது தெரியாதது போல் உணர்வேன்” என்று அவர் சொன்னார்”
இதையும் படிங்க: விராட் கோலி இல்லாமல் நடைபெறும் இந்த தொடரில் நிச்சயம் நாங்கள் அதனை மிஸ் பண்ணுவோம் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி
“அதைக் கேட்ட நான் உலகின் சிறந்த வீரரே இப்படியெல்லாம் உணர்வாரா? என்று வியந்தேன். அவருடைய ஆலோசனைகளுக்காக நன்றியுடையவனாக இருந்தேன். இதனாலேயே ஐபிஎல் உலகின் மிகச்சிறந்த அகடமி என்று நான் சொல்வேன். ஏனெனில் அங்கே உங்களுக்கு ஜாம்பவான்களின் ஆலோசனைகள் உங்களுக்கு கிடைக்கும். அது அடுத்த 6 – 12 மாதங்களில் உங்களுக்கு உதவும்” என்று கூறினார்.



