- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆசை வர காரணம் இந்த 2 இந்திய ஜாம்பவான்கள் தான் – ஜாஸ் பட்லர் ஓபன்டாக்

இங்கிலாந்து அணியின் முன்னனி வீரர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான ஜாஸ் பட்லர், தனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த இரண்டு இந்திய வீரர்களைப் பற்றி தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறத்து ஒரு தனியார் கிரிக்கெட் வலைத்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், அந்தப் பேட்டியில்… எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோதுதான் 1999ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் உலக கோப்பை தொடர் இங்கிலாத்தில் நடைபெற்றது.

அந்த தொடரில் ஒரு லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியைச் சேர்ந்த சவுரவ் கங்குலியும், ராகுல் ட்ராவிட்டும் விளையாடிய விதத்தைப் பார்த்ததில் இருந்து தான் எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகமானது என்று கூறியுள்ளார். அந்த போட்டியை நினைவு கூர்ந்த அவர், இலங்கையுடனான அந்த போட்டியில் இந்தியா துவக்க விக்கெட்டை சீக்கிரமாக இழந்து தடுமாறிய சமயத்தில், கங்குலியும், ராகுல் ட்ராவிட்டும் இணைந்து ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

- Advertisement -

இருவரும் இணைந்து 314 ரன்கள் பார்ட்னர் அமைத்ததோடு மட்டுமல்லாமல் இருவருமே அந்த போட்டியில் சதம் விளாசி அசத்தினர். அந்த இரண்டு சதங்களும்தான் என் வாழ்க்கையில், எனக்கு கிரிக்கெட் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்த மிக முக்கியமான காரணமாக அமைந்தது என்று கூறியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற அப்போட்டியில், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சடகோபன் ரமேஷை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜமிந்தா வாஸ் துவக்கத்திலேயே விக்கெட் எடுத்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த ராகுல் ட்ராவிட்டும், சவுரவ் கங்குலியும் இலங்கை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

அந்த போட்டியில் சவுரவ் கங்குலி 158 பந்துகளில் 183 ரன்களும், ராகுல் ட்ராவிட் 129 பந்துகளில் 145 ரன்களும் அடித்தனர். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 373 ரன்கள் குவித்ததோடு மட்டுமல்லாமல் இலங்கை அணியை 157 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by