இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த சீசனில் எஞ்சியுள்ள 31 போட்டிகளை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

அதன்படி தற்போது ஒவ்வொரு அணிகளாக ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன. இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து அணிகளுக்கும் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த இரண்டாவது பாதியில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரரான ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
அவரது விலகல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் ஒரு நல்ல காரியத்திற்காக இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி அவர் தனது மனைவியின் பிரசவத்திற்காக அதாவது தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்று பட்லர் தெரிவித்துள்ளார்.

பிரசவ நேரத்தில் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடவில்லை என்று தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் பட்லர் இதுவரை ஆயிரத்து 1441 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



