அந்த வெறித்தன பேட்டிங்க்கு ஐபிஎல் தான் காரணம், 500 ரன்களை அடிக்காமல் விடமாட்டோம் – இங்கிலாந்து நட்சத்திர வீரர் பேச்சு

- Advertisement -

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இயன் மோர்கன் தலைமையில் 2019 உலக கோப்பையை வென்று சாம்பியனாக திகழும் இங்கிலாந்து அணியில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதால் கத்துக்குட்டியான நெதர்லாந்துக்கு எதிராக அந்த அணி எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் 17இல் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டதை விட மும்மடங்கு அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து 232 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2-வது பெரிய வெற்றியை சுவைத்து 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

ஆம் அந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி பவுலர்களை கதற கதற அடித்து ரன் மழை பொழிந்து 498/4 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சொந்த சாதனையை உடைத்த இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்தது. அந்த அணிக்கு ஜேசன் ராய் 1 ரன்னில் அவுட்டானதும் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் – டேவிட் மாலன் ஆகியோர் 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து நெதர்லாந்தை கதற வைத்தனர்.

- Advertisement -

மிரட்டிய பட்லர்:
அதில் சால்ட் 122 (93) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு டேவிட் மாலனுடன் இணைந்து 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நெதர்லாந்தை மேலும் சிதறடித்தார். அதில் மாலன் 125 (109) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் மோர்கன் கோல்டன் டக் அவுட்டானார். ஆனால் அதற்கு அடுத்ததாக வந்த லியம் லிவிங்ஸ்டன் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 6 சிக்சர்கள் 66* (22) ரன்கள் விளாசி வெறித்தனமாக பேட்டிங் செய்தார். அவருடன் மறுபுறம் வெளுத்து வாங்கிய பட்லர் 7 பவுண்டரி 14 சிக்சருடன் சதமடித்து 162* (70) ரன்கள் விளாசினார்.

அதை தொடர்ந்து 499 என்ற மெகா இலக்கை துரத்திய நெதர்லாந்து முடிந்த அளவு போராடிய போதிலும் 49.4 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. இந்த வெற்றிக்கு அதிகப்பட்சமாக 162* (70) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் பைனல் வரை சென்று தோற்ற ராஜஸ்தான் அணிக்காக பெரும்பாலான போட்டிகளில் ரன் மழை பொழிந்த அவர் 863 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார்.

- Advertisement -

ஐபிஎல் உதவி:
அந்த முரட்டுத்தனமான பார்மை அப்படியே வைத்துள்ள அவர் நெதர்லாந்துக்கு எதிராக சரவெடியாக பேட்டிங் செய்ததற்கு ஐபிஎல் மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் எனக்கு சிறப்பாக சென்றது. நான் அதை மிகவும் விரும்பினேன். அது உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது. அதனால் இங்கு வரும்போது நல்ல உத்வேகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை முக்கியமானதாக நினைக்கிறேன். இங்கிலாந்துக்காக மீண்டும் விளையாட திரும்பியுள்ள சூழ்நிலை எப்போதும் கூறுவது போல எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்”

“மேலும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இல்லாமல் சாதாரணமாக விளையாடுவது சிறப்பான அம்சமாகும். கடந்த சில வருடங்களாகவே நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம். சில சமயங்களில் நான் நம்பர் 4 இடத்தில் விளையாட வேண்டியுள்ளது. எங்கள் அணியில் உள்ள அனைவருமே சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் விளையாடுகிறோம். ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் எனது வேலையை செய்கிறேன்” என்று கூறினார்.

500 ரன்கள்:
கடந்த 2015 உலக கோப்பைக்கு பின் அதிரடி எனும் ஒரே ஆயுதத்தை கையிலெடுத்து பெரும்பாலான போட்டிகளில் 400 ரன்களை கடந்து எதிரணிகளை பிரித்து மேய்ந்து வரும் இங்கிலாந்துக்கு அதன் பயனாக 2019 உலக கோப்பை பரிசாக கிடைத்தது. மேலும் 498, 481, 444 என ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட டாப் 3 ஸ்கோர்களுமே இங்கிலாந்து அடித்ததாகும். அதிலும் நெதர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியில் 500 ரன்கள் என்ற கற்பனை செய்ய முடியாத இலக்கை வெறும் 2 ரன்னில் தவறவிட்ட இங்கிலாந்து வரும் காலங்களில் நிச்சயம் அடிக்கும் என்று ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன்பும் ஒரு தருணத்தில் அதை நெருங்குகியுள்ளோம். நாங்கள் 500 ரன்களை உருவாக்குவது காலத்தின் விஷயமா என்று தெரியாது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிப்போம். அதை சாதிப்பது கடினமான ஒன்றாகும். அனேகமாக ஒரு சிறிய மைதானத்தில் பிளாட் பிட்ச் அமைந்தால் அது நடக்கும். மேலும் ஸ்கோர் என்பதைத் தாண்டியும் ஒரு அணியாக நாங்கள் எந்த மனநிலையில் செயல்படுகிறோம் என்பது முக்கியம். ஒரு அணியாக நாங்கள் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement