எம்எஸ் தோனியின் 16 வருட ஆல்-டைம் சாதனையை நொறுக்கிய ஜோஸ் பட்லர் புதிய உலகசாதனை – முழுவிவரம் இதோ

Jos Buttler MS Dhoni
- Advertisement -

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வந்தது. வரலாற்றிலேயே முதல் முறையாக இவ்விரு அணிகளும் இருதரப்பு நேருக்கு நேர் ஒருநாள் தொடரில் மோதுவது இதுவே முதல்முறையாகும். ஆனாலும் 2019 உலக கோப்பையை வென்று உலக சாம்பியனாக வலுவான அணியாக திகழும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து இந்த தொடரில் எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அம்ஸ்டெல்வீன் நகரில் கடந்த ஜூன் 17-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டதை விட முரட்டுத்தனமாக பேட்டிங் செய்த இங்கிலாந்து 498/4 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து அணியாக தனது சொந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

அப்போட்டியில் 232 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து ஜூன் 19இல் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலைமையில் இந்த தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜூன் 22-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:
காயம் காரணமாக கேப்டன் மோர்கன்க்கு பதில் ஜோஸ் பட்லர் தலைமை வகித்த அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி நெதர்லாந்து வழக்கம் போல எவ்வளவோ போராடிய போதிலும் 49.2 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக எட்வர்ட்ஸ் 64 (72) ரன்களும் பஸ் டீ லீடி 57 (78) ரன்களும் மேக்ஸ் ஓதாவுத் 50 (69) ரன்களும் எடுத்தனர். பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 245 என்ற சுலபமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் – ஜேசன் ராய் ஆகியோர் 85 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அதில் 9 பவுண்டரியுடன் பிலிப் சால்ட் 49 (30) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேவிட் மாலன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக கேப்டனாக களமிறங்கிய நட்சத்திர அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஜேசன் ராயுடன் இணைந்து அற்புதமாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் இங்கிலாந்தை வெற்றிபெற வைத்தார். அதில் 7 பவுண்டரி 5 சிக்சருடன் ஜோஸ் பட்லர் 86* (64) ரன்கள் எடுக்க 15 பவுண்டரிகளுடன் சதமடித்த ஜேசன் ராய் 101* (86) ரன்கள் விளாசினார். அதனால் 30.1 ஓவரில் 248/2 ரன்களை எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

பட்லர் உலகசாதனை:
இந்த வெற்றிக்கு சதமடித்து 101 ரன்கள் குவித்த ஜேசன் ராய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரில் களமிறங்கிய 2 போட்டிகளிலும் 162*, 86* என பெரிய ரன்களைக் குவித்து நெதர்லாந்தை வதம் செய்த ஜோஸ் பட்லர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். குறிப்பாக இப்போட்டியில் 31-வது ஓவரில் பால் வன் மீக்றேன் எனும் நெதர்லாந்து பவுலர் வீசிய ஒரு பந்து அவரின் கை நழுவி 2 பிட்ச்சாகி வந்தது.

அதை மெகா சிக்ஸராக பறக்க விட்ட ஜோஸ் பட்லர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் 14 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 3-வது போட்டியில் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 19 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். மொத்தமாக வெறும் 2 போட்டியிலேயே 19 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்சர் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்” என்ற இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2005இல் இலங்கைக்கு எதிரான தொடரில் வெளுத்த 183* ரன்கள் உட்பட 17 சிக்ஸர்கள் அடித்து எம்எஸ் தோனி இதுநாள் வரை தன்வசம் வைத்திருந்த சாதனையை தற்போது உடைத்துள்ள பட்லர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ஜோஸ் பட்லர் : 19 சிக்ஸர்கள், நெதர்லாந்துக்கு எதிராக, 2022*
2. எம்எஸ் தோனி : 17 சிக்ஸர்கள், இலங்கைக்கு எதிராக, 2005
3. ஏபி டிவில்லியர்ஸ் : 16 சிக்ஸர்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக,2015

Advertisement