இதெல்லாம் தேவையா என கிண்டலடித்த ரசிகர்கள், எல்லாமே வதந்தியென தெளிவுபடுத்திய இங்கிலாந்து வீரர் – நடந்தது இதோ

Jonny Bairstow Sam Curran
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியை கெத்தாக வென்று 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து மிரட்டிய இங்கிலாந்து உலக கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன் ஓய்வுக்கு பின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையில் முதல் முறையாக களமிறங்கியது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி 2 – 1 (3) என்ற கணக்கில் டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 அடுத்தடுத்த தொடர்களில் தோல்வியடைந்து சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது.

அத்துடன் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றதால் மேலும் பின்னடைவை சந்தித்த அந்த அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பதிவு செய்தது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 – 1 (3) என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

- Advertisement -

தேவையா இது:
அந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27-ஆம் தேதி முதல் துவங்கியது. பிரிஸ்டோல் நகரில் துவங்கிய முதல் போட்டிக்காக அந்நகரை சென்றடைந்த இங்கிலாந்து அணியினர் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இங்கிலாந்தின் நட்சத்திர அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ வித்தியாசமாக பயிற்சி எடுக்கிறேன் என்ற பெயரில் மற்றொரு இளம் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரனை தனது தோள் மீது தூக்கி பயிற்சி எடுக்க முயற்சித்தார்.

பாகுபலியை போல் ஒரு கால் முட்டி போட்டு அவரை தூக்க முயற்சித்த அவர் ஒருசில நொடிகள் தடுமாறினாலும் களத்தில் இறங்கி விட்டோம் இனி பின் வாங்கினால் அவமானம் என்ற வகையில் முழு மூச்சை கொடுத்து தூக்கினார். அப்படி வெற்றிகரமாக தூக்கும் போது அவரின் உடலும் முகமும் ஒருசில நொடிகள் அதிகப்படியான பாரத்தை உணர்வதை தெளிவாக பார்க்க முடிந்தது. இறுதியில் எப்படியோ வலுகொண்டு தூக்கி பயிற்சி எடுத்த அவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.

- Advertisement -

ஆனால் அந்த வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களில் காயம் காரணமாக வலைப்பயிற்சியில் பங்கேற்ற ஒருசில நிமிடங்களிலேயே ஜானி பேர்ஸ்டோ விலகினார் என்றும் அதற்கு சாம் கரனை தோள்மீது தூக்கிய போது அவரின் முழங்காலில் சுளுக்கு போன்ற காயம் ஏற்பட்டதே காரணம் என்று செய்திகள் வெளியாகின. அதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் இங்கிலாந்தின் பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. அதைப் பார்த்த ரசிகர்கள் தேவையா இது என்ற வகையில் சமூக வளைதளங்களில் ஜானி பேர்ஸ்டோவை கலாய்த்தனர்.

எல்லாமே வதந்தி:
அந்த நிலைமையில் அந்த உண்மையற்ற செய்தியையும் ரசிகர்களின் கிண்டல்களையும் அறிந்த ஜானி பேர்ஸ்டோ தமக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க தயாராக உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் தமக்கு காயம் ஏற்பட்டிருந்தால் எப்படி அவரை தூக்கி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ள அவர் அதைக்கூட புரிந்து கொள்ளாமல் வகைவகையாக எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் வதந்தி என்று சிரிப்புடன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “நான் ஃபிட்டாக இருப்பதுடன் முதல் போட்டியில் விளையாட தகுதியுடனும் உள்ளேன். எனவே இது சம்பந்தமாக வெளிவந்த அத்தனை கட்டுரைகளும் வெறும் வதந்தியாகும். ஒருவேளை நான் காயமடைந்திருந்தால் சாம் கரனை எப்படி தூக்கியிருக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் சமீபத்திய இந்திய தொடரில் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளிலிருந்து மீள்வதற்காக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்கு ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட இங்கிலாந்து அணியினர் முழுமூச்சுடன் போராட தயாராகி உள்ளனர்.

Advertisement