சர்வதேச அளவில் இந்தியா இன்று முதன்மையான அணியாக ஜொலிப்பதற்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி முக்கியமானவராக இருக்கிறார் என்று சொல்லலாம். ஏனெனில் 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்று ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த அவர் குறுகிய காலத்திலேயே இந்தியாவை வெற்றிப்பாதையில் திருப்பி வெளிநாடுகளில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அவர் உருவாக்கிய கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், எம்எஸ் தோனி போன்ற அனைவருமே நாளடைவில் ஜாம்பவானாக போற்றப்படும் அளவுக்கு மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள்.
அப்படி சௌரவ் கங்குலி வெற்றிகரமாக செயல்படுவதற்கு அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக முன்னாள் நியூசிலாந்து வீரர் ஜான் ரைட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்தியா மறுமலர்ச்சி வெற்றிகளை காண்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம். அந்த கூட்டணியில் 2002 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் நாட்வெஸ்ட் கோப்பையை வென்ற இந்தியா 2003 உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்று அசத்தியது.
பின்னணியை பகிர்ந்த சேவாக்:
அந்த வகையில் கங்குலி – ஜான் ரைட் கூட்டணியில் மலர்ந்த பல கிரிக்கெட் வீரர்களில் வீரேந்திர சேவாக் இந்திய கிரிக்கெட்டில் அதிரடி என்னும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை கற்பித்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக சௌரவ் கங்குலி நமக்கு கொடுத்த ஓப்பனிங் வாய்ப்பில் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விடும் ஸ்டைலை வெளிப்படுத்திய சேவாக் 90 ரன்களில் இருந்தால் மற்ற பேட்ஸ்மேன்களை போல் பதறாமல் அசால்டாக பவுண்டரி அல்லது சிக்ஸர்களை அடித்து சதத்தை தொடுவதிலும் உலகப் புகழ் பெற்றார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி 2 முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராகவும் சாதனை படைத்துள்ள அவர் 2011 உலகக்கோப்பை உட்பட நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றி மொத்தம் 17000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் மோசமாக அவுட்டானதால் பொறுமையிழந்த பயிற்சியாளர் ஜான் ரைட் தம்முடைய சட்டையின் காலரை பிடித்து தள்ளியதாக வீரேந்தர் சேவாக் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார்.
அதனால் கோபமடைந்த தாம் எப்படி ஒரு வெள்ளைக்காரர் தம்மை சட்டையை பிடித்து கீழே தள்ளலாம் என்று அணி நிர்வாகத்திடம் புகார் செய்ததாகவும் தெரிவிக்கும் சேவாக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2004 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஒரு போட்டியில் ஜான் ரைட்டால் நான் தள்ளப்பட்டேன். குறிப்பாக நான் மோசமாக அவுட்டாகி வெளியேறிய பின் அவர் என் காலரைப் பிடித்து இழுத்தார். அதனால் மிகவும் கோபமடைந்த நான் அப்போதைய இந்திய அணியின் மேனேஜர் ராஜிவ் சுக்லாவிடம் எப்படி ஒரு வெள்ளைக்காரர் என்னை அடிக்கலாம் என்று புகார் செய்தேன்”
“இருப்பினும் நாளடைவில் அம்ரித் மாதுர் மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் என்னையும் ஜான் ரைட்டையும் சமாதானப்படுத்தி விளையாட வைத்தனர்” என்று கூறினார். அப்படி சுமாராக செயல்பட்டதற்காக கண்டிப்புடன் நடந்து கொண்ட ஜான் ரைட் 2005 வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வெற்றிகரமாக செயல்பட்டார். ஆனால் அவருக்குப் பின் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணியில் குளறுபடிகளை செய்து கேப்டன் சௌரவ் கங்குலியுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:IND vs WI : 200வது போட்டியில் தோல்வியுடன் இதையும் பரிசா வெச்சுக்கோங்க – இந்தியாவுக்கு ஐசிசி கொடுத்த தண்டனை
அதன் காரணமாக பதவியை இழந்த சௌரவ் கங்குலிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் இந்தியா வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது. அதன் பின் பயிற்சியாளர்களே இல்லாமல் 2007 டி20 உலக கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன் பின் தொடர்ச்சியாக வெற்றி நடை போடத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.