நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்தில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரின் பாதியிலேயே விலக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த ஆண்டு மீண்டும் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி செயல்பட்டு வருகிறார். தற்போது 43 வயதான அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.
தோனிக்கு இதுதான் சரியான நேரம் : ஜோஹிந்தர் சர்மா
ஏற்கனவே இந்த தொடரின் பிளே ஆப் வாய்ப்பை இழந்த சென்னை அணியானது தற்போது இறுதிகட்ட போட்டிகளில் விளையாட இருக்கிறது. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆறுதலுடன் இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டிய பரிதாப நிலையிலும் தற்போது சி.எஸ்.கே உள்ளது. இந்நிலையில் தற்போது 43 வயதான மஹேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? அல்லது இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவித்து விடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.
ஆனால் தற்போது வரை தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாததால் அவர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என்று அனைவரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தோனியுடன் இணைந்து விளையாடிய முன்னாள் இந்திய வீரரான ஜோஹிந்தர் சர்மா ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. அதுகுறித்து அவர் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனியின் உடற்தகுதியை கருத்தில் கொண்டே அவர் அடுத்த ஆண்டு விளையாட வேண்டும். என்னை பொறுத்தவரை அவர் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இதுதான் என்று நம்புகிறேன். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் அதுதான் அவருடைய எதிர்காலத்திற்கும் சரியான முடிவாக இருக்கும் என்று தான் கருதுவதாக கூறியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே தனது ஓய்வு முடிவு குறித்து பேசியிருந்த தோனி கூறுகையில் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு என்னுடைய உடற்தகுதி அடுத்த ஆண்டு விளையாடும் அளவிற்கு தாங்குமா? என்பதை பார்க்க வேண்டும். இன்னும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக 6 முதல் 8 மாதங்கள் இருப்பதால் முன்கூட்டியே எதையும் சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு வரை பிட்டாக இருக்க கடினமாக உழைக்க வேண்டும்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் தனித்துவமான சாதனையை சன் ரைசர்ஸ் அணிக்காக நிகழ்த்திய – அபிஷேக் சர்மா
அதனால் அதை பொருத்து அடுத்த கட்ட முடிவை எடுக்க இருப்பதாக தோனி கூறியிருந்தார். இருப்பினும் நிச்சயம் அடுத்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் விளையாடி விட்டு சென்னை மண்ணில் தான் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஒரு சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



