இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடர் ஜூன் 20 ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. சமீபத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர்கள் ஓய்வு பெற்றனர்.
எனவே இம்முறை சீனியர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்வதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெறாதது பல இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
ஆர்ச்சர் கம்பேக்:
இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் 99% குணமடைந்து விட்டதால் இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியிலிருந்து விளையாட வருவார் என்று இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழு தலைவர் லுக் ரைட் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்ச்சர் நன்றாக குணமடைந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடுவதற்கு முன்பாக அவர் சில 2வது தரப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எங்களது திட்டமாகும்”
“எனவே அவர் சசக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் துர்ஹாம் அணிக்கு எதிராக சசக்ஸ் விளையாட உள்ளார். அந்த திட்டங்கள் அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் அவர் இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் விளையாடுவார்” என்று கூறினார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களை கலக்கமடைய வைப்பதாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
ரசிகர்கள் கலக்கம்:
ஏனெனில் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஆர்ச்சர் இந்திய அணிக்கு பெரிய சவாலைக் கொடுக்கும் திறமையைக் கண்டுள்ளார். கடந்த காலங்களில் அவர் ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்களையே திணறடித்த பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட அவர் இளம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.
இதையும் படிங்க: இதை 2007லயே சொன்னேன் யார் கேட்டா? ஆர்சிபி வெற்றியால் ரசிகர்கள் இழப்பை.. சாடிய கம்பீர்
குறிப்பாக துல்லியமான ஷார்ட் பிட்ச், மண்டையை பதம் பார்க்கும் பவுன்சர் பந்துகளை வீசி அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிரட்டலான சவாலைக் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார். எனவே ஆர்ச்சர் வருவது இந்திய அணிக்கு கொஞ்சம் சவாலாக பார்க்கப்படுகிறது. ஆனால் 2021 இந்திய தொடருக்குப்பின் அவர் 4 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்க உள்ளது இங்கிலாந்துக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.



