
ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2வது போட்டி டிசம்பர் 4ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து முதல் நாளின் முடிவில் 325/9 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக சதத்தை அடித்து 135*, ஜோப்ரா ஆர்ச்சர் 32* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். முன்னதாக அப்போட்டியில் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி அரை சதமடித்து 76 ரன்கள் குவித்தார். மறுபுறம் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடி தம்முடைய 40வது சதத்தை அடித்தார்.
ஆனால் எதிர்ப்புறம் ஹாரி ப்ரூக் 31, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19, ஜேமி ஸ்மித் 0, வில் ஜேக்ஸ் 19, கஸ் அட்கின்சன் 4, கார்ஸ் 0 என மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர் அதனால் 264/9 என சரிந்த இங்கிலாந்து 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம் முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு 20 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்தது.
அப்போது வேண்டுமென்றே ஆஸ்திரேலிய வீரர்கள் நேரத்தை வீணடிக்கும் வேலைகளை செய்தார்கள். குறிப்பாக அந்த 20 நிமிடத்திற்குள் கடைசி விக்கெட்டை எடுத்து விட்டால் ஆஸ்திரேலியா தங்களுடைய பேட்டிங்கில் நிறைய பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படிப்பட்ட நிலைமையில் இரவு நேரத்தில் புதிதாக மாற்றப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிறப்பந்து தாறுமாறாக ஸ்விங் ஆகும். அதை எதிர்கொள்வது எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கும் கடினமாக இருக்கும்.
எனவே அதைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியா அணி ஃபீல்ட் செட்டிங்கை மாற்றுவது போல சில நிமிடங்களை தாமதப்படுத்தியது. அதே போல ஷார்ட் லெக் பகுதியில் நின்ற டிராவிஸ் ஹெட் ஹெல்மெட்டை கொடுப்பதும் வாங்குவதுமாக இருந்தார். அதைப் புரிந்துகொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து வீசப்பட்ட பந்துகளில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 32* (26) ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க: விராட் கோலிக்கு இது ஒரு ஹேபிட்.. அதனால் தான் ஈஸியா செஞ்சுரி அடிக்குறாரு – சேவாக் புகழாரம்
அவருடன் இணைந்த ஜோ ரூட் தமது பங்கிற்கு அதிரடியாக விளையாடி கடைசி விக்கெட்டுக்கு 61* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையை ரூட் – ஆர்ச்சர் படைத்துள்ளார்கள். இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு மௌன்ட் மௌங்கனி மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இதே இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டாம் ப்ளெண்டல் – பிளாக் டிக்னர் ஆகியோர் 10வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும்.