இங்கிலாந்து அணியானது தங்களது சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர அனுபவ வீரரான ஜோ ரூட் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக தனது பலமான ஆதிக்கத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் இந்த தொடருக்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ஜோ ரூட் :
கடந்த 2012-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 153 போட்டிகளில் விளையாடி 13006 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மேலும் சில முக்கிய சாதனைகளுக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் சரி, இந்திய அணிக்கு எதிராகவும் சரி அவர் மகத்தான சில சாதனைகளை நிகழ்த்த இருக்கிறார். அந்த வகையில் ஜோ ரூட் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை நடைபெற்றுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மொத்தமாக 64 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 5543 ரன்களை குவித்துள்ளார்.
எதிர்வரும் இந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு அரைசதத்தை அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 40 முறை 50+ ஸ்கோர்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவார். அதோடு 57 ரன்களை அடிக்கும் பட்சத்தில் 6000 ரன்களை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அடித்த முதல் வீரராகவும் சாதனை நிகழ்த்துவார்.
இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 18 சதங்கள் மற்றும் 21 அரைசதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடரில் இரண்டு அரைசதங்களை அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : 2021இல் மிஸ்ஸான வெற்றியை இந்தியா பிடிக்க.. டாப் 6இல் இந்த பேட்ஸ்மேன்கள் ஆடனும்.. சாஸ்திரி அட்வைஸ்
அதுதவிர்த்து இந்திய அணிக்கு எதிராக இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2846 ரன்கள் அடித்திருக்கும் வேளையில் இன்னும் 154 ரன்கள் அடித்தால் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையும் நிகழ்த்துவார். இப்படி பல்வேறு சாதனைகளுக்காக காத்திருக்கும் ஜோ ரூட் இந்த தொடரில் பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



