இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 224 ரன்களுக்கு சுருண்டது.
சச்சினின் சாதனையை கடந்த ஜோ ரூட் :
அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் வேளையில் தற்போது வரை போட்டியின் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்துள்ளது. தற்போதைய நிலையில் 9 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இருக்கும் இங்கிலாந்து அணி விரைவில் ஆல் அவுட்டாக வாய்ப்புள்ளது.
அதன்காரணமாக இந்திய அணி இன்று இரண்டாம் நாள் இரண்டாவது இன்னிங்சை விளையாட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக நான்காவது வீரராக களம் இறங்கிய நட்சத்திர அனுபவ வீரரான ஜோ ரூட் 45 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்திருந்த வேளையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அவர் அடித்த இந்த 29 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை தகர்த்ததோடு மட்டுமின்றி இங்கிலாந்து மண்ணிலும் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளார். அந்த வகையில் ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 7,578 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுல்கர் 7,216 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த வேளையில் அவரை பின்னுக்கு தள்ளியா ஜோ ரூட் இந்த போட்டியில் அடித்த 29 ரன்கள் மூலம் இங்கிலாந்து மண்ணில் 7220 ரன்களை குவித்து சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க : நிரந்தரமாக மூடப்படும் கதவு.. முடிவுக்கு வந்த புஜாரா மற்றும் ரஹானேவின் கரியர் – என்ன நடந்தது?
அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக அவர் அடித்த இந்த 29 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் 2000 ரன்களை அடித்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.



