
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை மறுதினம் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இரு அணி வீரர்களும் தற்போது தீவிரமாக தயாராக வரும் வேளையில் இந்த தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஜோ ரூட் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் இந்திய வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை இந்திய அணியின் இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அற்புதமாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் தனது கரியரின் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சென்ற அவர் அங்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கண்டார்.
அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா போன்ற சவாலான ஆடுகளத்திலும் சதம் அடித்து தனது திறனை நிரூபித்துள்ளார். இப்படி தனது கரியரின் ஆரம்பத்திலேயே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்த இங்கிலாந்து தொடர் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு அற்புதமான வீரர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் அசத்தியது போன்று இம்முறை இங்கிலாந்திலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த நினைப்பார்.
அதனால் இந்த தொடர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இந்திய அணியை பொறுத்தவரை தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிற்கு மட்டும் நான் வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் தற்போது ஏராளமான இளம் வீரர்கள் திறமையுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஜாம்பவானாக ஜோ ரூட் நிகழ்த்த இருக்கும் இமாலய சாதனை – விவரம் இதோ
அதனால் எந்த வீரரை அணியில் தேர்வு செய்வது என்பது மிகக் கடினமான வேலை. எனவே இந்திய அணியை பொறுத்தவரை செலக்டராக மட்டும் நான் வருவதற்கு யோசித்துக் கூட பார்க்க மாட்டேன். அந்த அளவிற்கு இந்தியாவில் திறமையான இளம் வீரர்கள் கொட்டிக் கிடக்கின்றனர் என ஜோ ரூட் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.