சச்சினின் ஆல் டைம் சாதனையை ரூட் உடைப்பார் – உறுதியாக கூறும் முன்னாள் ஆஸி கேப்டன்

Joe Root
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து எதிர்கொண்டது. ஜூன் 2-ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய டெஸ்ட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கோலின் டீ கிரான்ஹோம் 42* ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அறிமுக போட்டியில் களமிறங்கிய மாட்டி போட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்தையும் மடக்கிப் பிடித்த நியூசிலாந்து வெறும் 141 ரன்களுக்குள் சுருட்டியது.

- Advertisement -

ஜோஸ் ரூட் 10000:
அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 43 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மீண்டும் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் டார்ல் மிட்சேல் 108, டாம் ப்ளண்டல் 96 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்கள் எடுத்ததால் 285 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மாட்டி போட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Joe Root Sachin Tendulkar

அதனால் 277 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மிடில் ஆர்டரில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 54 ரன்கள் எடுத்து போராடி ஆட்டமிழந்தார். இருப்பினும் அவருடன் ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக பேட்டிங் செய்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 12 பவுண்டரியுடன் சதமடித்து 115* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். கடந்த சில வருடங்களாகவே கேப்டனாக வெற்றிகளைக் குவிக்க தவறினாலும் பேட்ஸ்மேனாக ரன் மழை பொழிந்து வரும் அவர் அந்த பார்மை கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக தொடர்ந்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்துள்ளார்.

- Advertisement -

அதைவிட இப்போட்டியில் எடுத்த 115 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த இவர் ஒட்டுமொத்த வரலாற்றில் 10000 ரன்களை எடுத்த 14-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றார். அதைவிட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் 10000 ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முந்தி அலெஸ்டர் குக் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. அலஸ்டர் குக்/ஜோ ரூட் : 31 வருடம் 157 நாட்கள்
2. சச்சின் டெண்டுல்கர் : 31 வருடம் 326 நாட்கள்

Mark-Taylor

சச்சின் சாதனை உடைப்பார்:
இந்நிலையில் 31 வயதிலேயே இவ்வளவு பெரிய சாதனையை தொட்டுள்ள ஜோ ரூட் குறைந்தது அடுத்த 4 – 5 வருடங்கள் விளையாடுவார் என்பதால் வருடத்திற்கு 800 – 1000 ரன்களை அடித்தால் கூட எளிதாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விடுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். 15, 921 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள சச்சினை அவர் தொடுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ரூட் வசம் இன்னும் குறைந்தது 5 வருடங்கள் உள்ளது. எனவே டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது சாத்தியமாகும். கடந்த 2 வருடங்கள் அல்லது 18 மாதங்களில் நான் பார்த்த பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். தனது கேரியரில் உச்சபட்ச பார்மில் இருக்கும் இவர் இதை தொடர்ந்தால் 15000க்கும் மேற்பட்ட ரன்களை எளிதாக அடிக்கலாம்” என்று கூறினார்.

hussain

அதேபோல் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் ஜோ ரூட் இன்னும் நிறைய ரன்கள் அடித்து சச்சின் சாதனையை தொடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்தது பின்வருமாறு. “அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் தனது நுணுக்கத்தில் சிறந்து விளங்குகிறார். இதற்கு முன் கேப்டன்ஷிப் அழுத்தம் அவரின் தோள் மீது சுமையாக இருந்ததாக உணர்ந்தார். தற்போது அதில் விடுபட்டுள்ளதால் இங்கிலாந்துக்காக தேவையான அனைத்தையும் அவரால் செய்ய முடியும்” என்று கூறினார்.

Advertisement