8 விக்கெட்ஸ் 430 ரன்ஸ்.. தோல்விக்கு தயாராகும் இலங்கை.. இங்கிலாந்தின் சச்சினாக ஜோ ரூட் சாதனை

Joe Root 2
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 143, கஸ் அட்கின்ஷன் சதமடித்து 118 ரன்கள் விளாசினர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசித்தா பெர்னான்டோ 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி மீண்டும் இங்கிலாந்தின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் சுமாராக விளையாடி 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

தோல்விக்கு தயாராகும் இலங்கை:

அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ், கஸ் அட்கிட்சன், ஓலி ஸ்டோன், மேத்யூ போட்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 251 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 103 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா, அஷிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இறுதியில் 483 என்ற மெகா இலக்கை சேசிங் செய்யும் இலங்கை 3வது நாள் முடிவில் 53-2 என தடுமாற்றமாக விளையாடி வருகிறது. அந்த அணிக்கு மதுசங்கா 13, நிசாங்கா 14 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் கருணரத்னே 23*, பிரபத் ஜெயசூர்யா 3* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 8 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் வைத்துள்ள இலங்கைக்கு இன்னும் 430 ரன்கள் தேவைப்படுகிறது.

- Advertisement -

50 சதங்கள்:

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் 430 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்தது கிடையாது. அதனால் இந்தப் போட்டியிலும் இலங்கை தோல்வியை சந்திப்பதற்கு தயாராகி வருகிறது என்றே சொல்லலாம். முன்னதாக இப்போட்டியில் அடித்த 2 சதங்களையும் சேர்த்து ஜோ ரூட் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (34) அடித்த வீரராக வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க: இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தது மட்டுமல்லாமல் முதல் இங்கிலாந்து வீரராக ஜோ ரூட் நிகழ்த்திய சாதனை

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 16 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் (100) அடித்த சச்சினை போல இங்கிலாந்துக்காக 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இது போக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் (2022) அடித்த வீரராகவும் ரூட் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கிரகாம் கூச் 2015 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement