இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இலங்கையை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு டான் லாரன்ஸ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் ஓலி போப் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார்.
அசத்திய ரூட்:
அவருடன் ஜோடி சேர்ந்து விளையாட முயற்சித்த மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் 40 ரன்கள் குவித்து அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ஹரி ப்ரூக் கொஞ்சம் அதிரடியாக விளையாட முயற்சித்து 33 ரன்களில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜோ ரூட் அரை சதமடித்து அசத்திய நிலையில் எதிர்புறம் வந்த ஜேமி ஸ்மித் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்ததாக வந்த கிரிஸ் ஓக்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி சென்றாலும் இந்த பக்கம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய ஜோ ரூட் இலங்கைக்கு சவாலை கொடுத்து சதமடித்தார். அவருடன் அடுத்ததாக வந்த கஸ் அட்கின்ஷன் ஜோடி சேர்ந்து இலங்கை பவுலர்களை கொஞ்சம் அதிரடியாக எதிர்கொண்டார். அந்த வகையில் 7வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை வலுப்படுத்திய அந்த ஜோடியில் ஜோ ரூட் 18 பவுண்டரியுடன் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தின் ஆல் டைம் நாயகன்:
இறுதியில் முதல் நாள் முடிவில் 358/7 எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ள இங்கிலாந்துக்கு களத்தில் அட்கின்ஷன் 74*, மேத்தியூ போட்ஸ் 20* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஜோ ரூட் தன்னுடைய சர்வதேச கேரியரில் 49* சதங்கள் அடித்துள்ளார். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஓய்வு பெறாமல் விளையாடும் வீரர்களில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரராக அவர் ரோஹித்தை முந்தி சாதனை படைத்துள்ளார். அப்பட்டியல்:
1. விராட் கோலி : 80
2. ஜோ ரூட் : 49*
3. ரோஹித் சர்மா : 48
இதையும் படிங்க: இந்திய அணிக்கு வயசாகிடுச்சு.. அவரால் பெர்த்தில் சாதிக்க முடியாது.. ஆஸி வெல்லும்.. ஜாம்பவான் கோச் பேட்டி
அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஜோ ரூட் 33* சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக இங்கிலாந்துக்காக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை சமன் செய்துள்ள ஜோ ரூட் அந்நாட்டின் ஆல் டைம் ஜாம்பவான் நாயகனாக இப்போதே உருவெடுத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்க்ஸ்):
1. ஜோ ரூட் : 33* (144)
2. அலெஸ்டர் குக் : 33 (161)
3. கெவின் பீட்டர்சன் : 23 (104)



